தேராது உரைப்பன் தெருமரல் உள்ளத்தொடு பேராது அருளுதல் பெரியோர் கடனே நின்னைக் கலப்பது என் உண்மை எனில் நினது நேர்மை சொல்மனத்து இன்றே எழுவகைத் தாதுவின் ஏழ்துளை இரண்டும் பெருமுழைக் குரம்பையில் பெய்து அகத்து அடக்கி நீக்கி என்றனைப் போக்குஅற நிறுத்தி இச்சை முதலிய எழுப்பி நடத்திடும் விச்சை சாலவும் வியப்பு அது நிற்க வாக்கும் மனமும் போக்கு உள தனுவும் சொல்லும் நினைவும் செய்யும் செயலும் நல்லவும் தீயவும் எல்லாம் அறிந்து முறை பிறழாமல் குறைவு நிறைவு இன்றாய்க் காலமும் தேசமும் மால் அற வகுத்து நடுவுநின்று அருத்தலின் நடுவன் ஆகுதியே சான்றோர் செய்தி மான்று இருப்பு இன்றே சாலார் செயலே மால் ஆகுவதே அத்துவா மெத்தி அடங்கா வினைகளும் சுத்திசெய் தனையே ஒத்த கன்மத்திடை நீங்கின என்னை ஊங்கு ஊழ் வினைகளும் ஆங்கு அவை அருத்துவது ஆரைகொல் அதனால் கருமம் அருத்தும் கடன் அது இன்றாம் தருமம் புரத்தல் பெருமையது அன்றே கண்ணினுள் மணிய! கருத்தினுள் கருத்த! வெண்ணெய் வேந்த! மெய்கண்ட தேவ! இடர்படு குரம்பையில் இருத்தித் துடைப்பது இல்லா அருள் தோன்றிடச் சொல்லே