திருவருட்பயன் | Thiruvarutpayan | full

திருவருட்பயன் | Thiruvarutpayan | full
பாடல் எண் பாடல் Verse
0 கணபதி வணக்கம்

பதம் பிரித்துஉள்ளபடியே
நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்.
நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்.
பொருள் : அருள் வடிவான யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானைப் புகலாக அடைந்தால், மெய்ந்நூலறிவு வருந்திக் கற்க வேண்டிய பொருள் ஆகாது. அஃது எளிதில் வரும்.

திருவருட்பயன் > காப்புச் செய்யுள் > பாடல்: 0

1 எங்கும் நிறைந்து நின்று இயக்குபவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
அகர உயிர் போல் அறிவாகி எங்கும்
நிகரில் இறை நிற்கும் நிறைந்து.
அகர வுயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து.
பொருள் : பதிப்பொருள் தனக்கு ஒப்பாக வேறு ஒரு பொருளும் இல்லாதது. அது பேரறிவாய் எங்கும் நீக்கமின்றி நிறைந்து நிற்கும். அகரமாகிய உயிரெழுத்து மற்றைய எல்லா எழுத்துக்களிலும் இயைந்து நின்று அவற்றை இயக்குவது போலப் பதிப்பொருள் பிற எல்லாப் பொருளிலும் வேற்றுமையின்றிக் கலந்து நின்று அவற்றை இயக்கும். எனவே பதியாகிய இறையே உலகிற்கு முதல் என்பது விளங்கும்.

திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 1

2 சத்தியோடு கூடியவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
தன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும் சத்தி
பின்னம் இலான் எங்கள் பிரான்.
தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலா னெங்கள் பிரான்.
பொருள் : ஒருவனாகிய எம் இறைவன் பிறப்பு இறப்பிற் படாமல் என்றும் ஒரு தன்மையனாய் உள்ளவன். அந்த நிலைமையைப் பலவாகிய உயிர்களும் பெறும்படியாகச் செய்யும் தனது சத்தியோடு அவன் வேறின்றி நிற்கிறான்.

திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 2

3 ஒப்பு இல்லாதவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
பெருமைக்கும் நுண்மைக்கும் பேர் அருட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பு இன்மையான்.
பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றி
னருமைக்கு மொப்பின்மை யான்.
பொருள் : எல்லாவற்றிலும் பெரிய பொருளாய் நிற்கும் தன்மையில் அவனை ஒப்பார் இல்லை. எல்லாப் பொருளிலும் உட்கலந்து நிறைந்து நிற்கும் நுண்மையில் அவனை ஒப்பார் இல்லை. எல்லாவுயிர்களிடத்திலும் கொண்டிருக்கும் மாறாத பெருங்கருணைத் திறத்தில் அவனை ஒப்பார் யாருளர்? பிறர் தன்னைப் பெறுவதற்கு அரியனாய் நிற்கும் நிலைமையிலும் அவன் ஒப்பார் இல்லாதவனே. இவ்வாறு பெருமை, நுண்மை, பேரருள், பெறுதற்கு அருமை ஆகிய இந்நான்கு திறத்திலும் தனக்கு ஒப்பாக வேறொன்று இல்லாத சிறப்பினை உடையவன் எம் இறைவன்.

திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 3

4 முத்தொழில் செய்பவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
ஆக்கி எவையும் அளித்து ஆசுடன் அடங்கப்
போக்கும் அவன் போகாப் புகல்.
ஆக்கி யெவையு மளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்.
பொருள் : இறைவன் உயிர்களிடம் உள்ள ஆணவ மலமாகிய அழுக்கினை நீக்க வேண்டியே அவ்வுயிர்களுக்கு உடம்பும், ஐம்பொறி முதலிய கருவிகளும், உலகும், உலகிலுள்ள நுகர்ச்சிப் பொருள்களும் ஆகிய எல்லாவற்றையும் படைத்துக் கொடுக்கின்றான்; உயிர்கள் குறித்த காலம் வரை அவற்றோடு பொருந்தி வாழும்படியாக அவற்றை நிலை நிறுத்தி காக்கின்றான்; பின், ஆணவ மலம் நீங்கும் நிலையை அடையும் காலத்தில் அம் மலத்தோடு சேர்த்து, தான் படைத்துக் காத்த உடம்பு முதலிய பொருள்களையும் ஒரு சேரப் போக்கி உயிரைத் தூய தாக்குகின்றான். இப்பேருதவியைச் செய்யும் இறைவனே உயிர்களுக்கு நீங்காத புகலிடம் ஆவான்.

திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 4

5 மூவகைத் திருமேனி கொள்பவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம்
உருவம் உடையான் உளன்.
அருவு முருவு மறிஞர்க் கறிவா
முருவ முடையா னுளன்.
பொருள் : இறைவன் ஞானியர்க்கு அறிவே வடிவாய் விளங்குகின்றான். ஏனையோர்க்கு அருவம், உருவம், அரு வுருவம் என்னும் மூன்று திருமேனிகளை உடையவனாய் இருக்கின்றான்.

திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 5

6 அவனுக்கு மேலானதொரு பொருளில்லை

பதம் பிரித்துஉள்ளபடியே
பல் ஆர் உயிர் உணரும் பான்மை என மேல் ஒருவன்
இல்லாதான் எங்கள் இறை.
பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவ
னில்லாதா னெங்க ளிறை.
பொருள் : உயிர்கள் எண்ணற்றவை; அறியும் தன்மை உடையவை. ஆனால், அவை தாமே அறியமாட்டா; வேறொரு துணை அறிவிக்கவே அறிவன. அவ்வுயிர்களைப் போன்றவனல்லன் எம் இறைவன். அவன்தானே எல்லாவற்றையும் அறிபவன். தன்னை அறிவித்தற்குத் தனக்கு மேலாக ஒருவனை உடையவன் அல்லன்.

திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 6

7 அடியவர் உள்ளத்தில் விளங்கி நிற்பவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வான் நாடர் காணாத மன்.
ஆனா வறிவா யகலா னடியவர்க்கு
வானாடர் காணாத மன்.
பொருள் : தேவர்களாலும் அறியப்படாத தலைவனாகிய சிவபெருமான் தன்னையே நினைந்துருகும் அடியவரின் அறிவில் நீங்காத பேரறிவாய் நிறைந்து, அவரை விட்டு அகலாது இருப்பான்.

திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 7

8 கலந்து நிற்பினும் வேறாய் நிற்பவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
எங்கும் எவையும் எரி உறுநீர் போல் ஏகம்
தங்கும் அவன் தானே தனி. check check
எங்கு மெவையு மெரியுறுநீர் போலேகந்
தங்குமவன் றானே தனி.
பொருள் : காய்ச்சிய நீரில் கலந்து நிற்கும் வெப்பம் போல இறைவன் எல்லா வுலகங்களிலும் எல்லா வுயிர்களிலும் ஒன்றாய்க் கலந்து நிற்கிறான். அதே நேரத்தில் அவன் அவற்றிற்கு வேறாய்த் தனித்தும் நிற்கிறான்.

திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 8

9 சார்ந்தவர்க்கு இன்பம் தருபவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
நலம் இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலம் இலன் பேர் சங்கரன்.
நலமில னண்ணார்க்கு நண்ணினர்க்கு னல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.
பொருள் : இறைவன் தன்னை அடைந்தவர்க்கு இன்பத்தைத் தருபவன்; தன்னை அடையாதவர்க்கு இன்பத்தைத் தராதவன். இவ்வாறு ஒரு சாரார்க்கு மட்டும் நன்மை செய்வதனால் அவன் ஓர வஞ்சனை உடையவன் போ<லும் என்று எண்ணவேண்டா. அவன் என்றும் ஒருபால் கோடாதவன்; நடுவு நிலைமையன். எல்லாவுயிர்களுக்கும் தனது பேரின்பத்தை வழங்க வேண்டும் என்பதே அவனது திருக்குறிப்பாகும். அதுபற்றியே அவனுக்குச் சங்கரன் என்ற பெயர் வழங்குகிறது. சங்கரன் என்பதற்கு, எல்லா வுயிர்களுக்கும் இன்பத்தைச் செய்பவன் என்பது பொருள். சம்-இன்பம்; கரன்-செய்பவன்.

திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 9

10 பிறவிக்கு மருந்து ஆவான்

பதம் பிரித்துஉள்ளபடியே
உன்னும் உளதையம் இலது உணர்வாய் ஓவாது
மன்னு பவம் தீர்க்கு மருந்து. check check
உன்னுமுள தைய மிலதுணர்வா யோவாது
மன்னுபவந் தீர்க்கு மருந்து.
பொருள் : இடைவிடாது தொடர்ந்து பற்றி வருகின்ற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது. அஃது உங்களிடமே உள்ளது. <உங்கள் அறிவினுள்ளே உள்ளது. அம் மருந்துதான் இறைவன். அவன் உளனா, இலனா என்று ஐயுற வேண்டுவதில்லை. அவனைப் புறத்தே தேடாமல், உமது அகத்தே நோக்கி உணர முற்படுங்கள்.

திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 10

11 உயிர்களின் தொகை

பதம் பிரித்துஉள்ளபடியே
பிறந்த நாள் மேலும் பிறக்கும் நாள் போலும்
துறந்தோர் இறப்போர் தொகை.
பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலுந்
துறந்தோ ரிறப்போர் தொகை.
பொருள் : இதுவரையில் பற்று நீங்கி முத்தி பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை எண்ணிச் சொல்லுதல் முடியாது. இது, உலகம் தோன்றிய காலந்தொட்டு இது வரையில் வந்துபோன நாட்களை எண்ணிச் சொல்வது போல முடியாத செயல். அவ்வாறே, இனிமேல் பற்று நீங்கி முத்தி பெற இருப்பவர்களின் எண்ணிக்கையையும் சொல்லுதல் முடியாது. இதுவும், உலகம் முடியும் வரை இனி மேல் வர இருக்கின்ற நாட்களை எண்ணி அறிய முயல்வது போல முடியாத செயலேயாகும்.

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 11

12 உயிர்கள் மூவகையினர்

பதம் பிரித்துஉள்ளபடியே
திரி மலத்தார் ஒன்று அதனில் சென்றார்கள் அன்றி
ஒரு மலத்தார் ஆயும் உளர்.
திரிமலத்தாரொன்றதனிற் சென்றார்க ளன்றி
யொருமலத்தா ராயு முளர்.
பொருள் : எல்லாவுயிர்களும் மூவகையுள் அடங்கி நிற்பர். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் உடையவர் எனவும், அவற்றுள் மாயை நீங்கிய இரு மலம் உடையவர் எனவும், மாயையோடு கன்மமும் இன்றி ஒரு மலமே உடையவர் எனவும் இங்ஙனம் மூவகையினராவர்.

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 12

13 மாயையுள் அகப்பட்டு மயங்குவோர்

பதம் பிரித்துஉள்ளபடியே
மூன்று திறத்து உள்ளாரும் மூல மலத்து உள்ளார்கள்
தோன்றலர் தொத்து உள்ளார் துணை.
மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணை.
பொருள் : மேற்கூறிய மூவகைப்பட்ட உயிர்களும் மூலமலமாகிய ஆணவத்தில் அகப்பட்டுள்ளார்கள். அவர்களுள் மாயைப் பிணிப்புள்ள சகலரே தமக்குத் துணையாய் உள்ள இறைவனை உணரப் பெறாது மயங்கி நிற்பர்.

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 13

14 உயிருக்குத் தன்வயமான செயலில்லை

பதம் பிரித்துஉள்ளபடியே
கண்டவற்றை நாளும் கனவில் கலங்கி இடும்
திண் திறலுக்கு என்னோ செயல். check check
கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கியிடுந்
திண்டிறலுக் கென்னோ செயல்.
பொருள் : நாள்தோறும் நனவில் தெளிவாகக் கண்டு பழகிய பொருள்களைக் கனவில் மாறுபடக் கண்டு மயங்குகிற, இந்த அற்பமான உயிருக்கு என்ன சுதந்திரமான செயல் இருக்கிறது?

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 14

15 உயிருக்குச் சித்து என்ற பெயர் பொருந்துமோ?

பதம் பிரித்துஉள்ளபடியே
பொறி இன்றி ஒன்றும் புணராதே புந்திக்கு
அறிவு என்ற பேர் நன்று அற.
பொறியின்றி யொன்றும் புணராதே புந்திக்
கறிவென்ற பேர்நன் றற.
பொருள் : ஐம்பொறிகளின் துணையின்றி ஒன்றையும் அறியமாட்டாத உயிருக்குப் போய் சித்து என்று பெயர் வைத்திருக்கிறார்களே. அந்தப் பெயர் மிக நன்றாய் இருக்கிறது! என்று இகழ்ச்சிக் குறிப்போடு கூறுகிறார் ஆசிரியர்.

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 15

16 உயிர் அறியுந்தன்மை உடையதே

பதம் பிரித்துஉள்ளபடியே
ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவு இல் எனில் என் செய.
ஒளியு மிருளு முலகு மலர்கட்
டெளிவி லெனிலென் செய.
பொருள் : விழித்திருக்கின்ற கண்ணிடத்தில் காணும் தன்மை இல்லையாயின், ஒளியும், இருளும் உலகும் ஆகிய மூன்றும் இருந்தும் அக்கண்ணிற்கு என்ன பயன்? அவை யாதொரு பயனையும் செய்யா.

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 16

17 உயிர் சதசத்தாய் நிற்பது

பதம் பிரித்துஉள்ளபடியே
சத்து அசத்தைச் சாராது அசத்து அறியாது அங்கண் இவை
உய்த்தல் சதசத்தாம் உயிர்.
சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கணிவை
யுய்த்தல்சத சத்தா முயிர்.
பொருள் : சத்தாகிய முதற்பொருள் அசத்தாகிய உலகத்தை அறிந்து அனுபவியாது. அசத்தாகிய உலகம் அறிவற்ற சடம் ஆதலின் அது சத்தாகிய முதற்பொருளை அறியாது. இந்நிலைமையில் இவ்விரண்டினிடத்தும் தனது அறிவைச் செலுத்தி அனுபவிப்பது உயிரேயாகும். அவ்வுயிர் சத்தும் ஆகாமல் அசத்தும் ஆகாமல் சதசத்தாய் நிற்கும் இயல்பினது.

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 17

18 சார்ந்ததன் வண்ணமாதல்

பதம் பிரித்துஉள்ளபடியே
இருளில் இருள் ஆகி எல் இடத்தில் எல்லாம்
பொருள்கள் இலதோ புவி.
இருளி லிருளாகி யெல்லிடத்தி லெல்லாம்
பொருள்க ளிலதோ புவி.
பொருள் : இருள் உள்ளபோது இருளேயாகியும், ஒளி வந்தபோது ஒளியேயாகியும் இவ்வாறு சார்ந்ததன் வண்ணம் ஆகின்ற பொருள்கள் இவ்வுலகில் இல்லையோ?

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 18

19 ஆன்ம அறிவுக்குக் கூகையின் கண் உவமை

பதம் பிரித்துஉள்ளபடியே
ஊமன் கண் போல ஒளியும் மிக இருளேயாம்
மன்கண் காணாத அவை.
ஊமன்கண் போல வொளியு மிகவிருளே
யாம்மன்கண் காணாத வை.
பொருள் : கூகையின் கண் பகலில் சூரியவொளியில் கலந்து நின்றாலும் அவ்வொளியை அறியாது இருள் வயப்பட்டிருக்கும். அதுபோல, அநாதியில் உயிர்கள் பேரறிவாகிய திருவருள் ஒளியோடு கூடியிருந்தும் அவ்வொளியை அறியாதனவாய் ஆணவ இருளின் வயப்பட்டு இருளாய் நிற்கும்.

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 19

20 இவ்வுயிர் திருவருளை உணர்வது எந்நாளோ?

பதம் பிரித்துஉள்ளபடியே
அன்று ஆளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள் தெரிவது
என்று அளவு ஒன்று இல்லா இடர். check check
அன்றளவு மாற்றுமுயி ரந்தோ வருள்தெரிவ
தென்றளவொன் றில்லா விடர்.
பொருள் : அநாதியாகிய அன்று தொட்டு இன்று வரையிலும் அளவற்ற துன்பங்களைத் தாங்கி நுகர்ந்து வருவனவாகிய உயிர்கள் மிகவும் இரங்கத் தக்கவை. அவை இறைவனது ஞானமாகிய திருவருள் ஒளியைப் பெற்றுத் துன்பம் நீங்கப் பெறுவது எந்நாளோ?

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 20

21 ஆணவ மலம் என்பது உண்டு

பதம் பிரித்துஉள்ளபடியே
துன்றும் பவத் துயரும் இன்பும் துணைப் பொருளும்
இன்று என்பது எவ்வாறும் இல்.
துன்றும் பவத்துயரு மின்புந் துணைப்பொருளு
மின்றென்ப தெவ்வாறு மில்.
பொருள் : இடையறாது தொடர்ந்து வருகின்ற பிறவித் துன்பமும், அது நீங்கிப் பெறுகின்ற பேரின்பமும், உயிர்கள் அதனைப் பெறுதற்குத் துணையாய் நிற்கும் இறைவனாகிய முதற் பொருளும் ஆகியவை இல்லாத பொருள்கள் என்று சொல்<லுவது எவ்வகையிலும் பொருந்தாது. அவ்வாறாகவும், மாந்தர் அவற்றை இல்லையெனக் கருதி வருவதற்குக் காரணம் இருத்தல் வேண்டும். அதுவே ஆணவ மலம்.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 21

22 அக இருளாய் நிற்பது

பதம் பிரித்துஉள்ளபடியே
இருள் ஆனது அன்றி இலது எவையும் ஏகப்
பொருள் ஆகி நிற்கும் பொருள்.
இருளான தன்றி யிலதெவையு மேகப்
பொருளாகி நிற்கும் பொருள்.
பொருள் : உலகத்திலுள்ள பல வகைப்பட்ட பொருள்களையும் அவைகளுடைய தன்மை தோன்றாதபடியும், அவை யாவும் தானேயாய்த் தோன்றும்படியும், மறைத்து நிற்கும் பொருள் இருளையன்றி வேறில்லை. இந்தப் புற இருளைப் போலப் பதி, பசு, பாசம் ஆகிய அறியத்தக்க பலவகைப் பொருள்களையும் அவைகளுடைய தன்மை தோன்றாதபடி மறைத்து நிற்பது ஆணவ மலம் ஆகிய அகவிருளாகும்.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 22

23 அக இருள் புற இருளினும் கொடியது

பதம் பிரித்துஉள்ளபடியே
ஒரு பொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்
இரு பொருளும் காட்டாது இது.
ஒருபொருளுங் காட்டா திருளுருவங் காட்டு
மிருபொருளுங் காட்டா திது.
பொருள் : புற இருள் ஒரு பொருளையும் காண ஒட்டாதபடி நமது கண்ணை மறைத்து விடும். ஆயினும் தன்னைக் காட்டி நிற்கும். அஃதாவது, தான் ஒரு பொருள் உண்டு என்பதை நாம் உணர நிற்கும். அக இருளாகிய இந்த ஆணவ மலம் இறைவன். உயிர் முதலிய பிற பொருள்களையும் அறிய வொட்டாது. தன்னையும் காட்டிக் கொள்ளாது. இவ்வாறு பிற பொருள், தான் என்ற இரண்டையும் நாம் அறிய முடியாத வகையில் நமது அறிவை மறைத்து நிற்கும்.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 23

24 இன்று வரையிலும் நீங்காது உள்ளது

பதம் பிரித்துஉள்ளபடியே
அன்று அளவி உள் ஒளியோடு ஆவி இடை அடங்கி
இன்று அளவும் நின்றது இருள்.
அன்றளவி யுள்ளொளியோ டாவி யிடையடங்கி
யின்றளவும் நின்ற திருள்.
பொருள் : உயிரிடத்தில் இரண்டறக் கலந்து நிற்கின்ற உள்ளொளியாகிய இறைவனோடு ஆணவமாகிய இருளும் அன்றே உடன் கலந்திருக்கிறது. அந்த இருள் இறைவனுக்குக் கீழ்ப்பட்டதாய் அடங்கி உயிரை மட்டுமே பற்றி நிற்கிறது. அன்று தொட்டு இன்று வரையிலும் உயிரை விட்டு நீங்காமலே உள்ளது.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 24

25 இருட்பாவை

பதம் பிரித்துஉள்ளபடியே
பலரைப் புணர்ந்தும் இருள் பாவைக்கு உண்டு என்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு.
பலரைப் புணர்ந்து மிருட் பாவைக்குண் டென்றுங்
கணவற்குந் தோன்றாத கற்பு.
பொருள் : அக இருளாகிய பெண் ஆன்மாக்களாகிய ஆடவர் பலரோடு சேர்ந்திருப்பவள். ஆயினும், அந்த அந்த ஆன்மாவாகிய கணவர்க்குத் தன் உண்மை யியல்பை அவள் என்றுமே காட்டிக் கொள்ளமாட்டாள்; தன்னைச் சிறந்தவளாகவே காட்டி நிற்பாள்.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 25

26 அறியாமையை விளைவிப்பது ஆணவ மலமே

பதம் பிரித்துஉள்ளபடியே
பல் மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மை இருளார் தந்தது.
பன்மொழிக ளென்னுணரும் பான்மை தெரியாத
தன்மை யிருளார்தந் தது.
பொருள் : பல சொற்கள் எதற்கு? முடிவாகச் சொன்னால் உயிரினது அறியுந்தன்மையை விளங்க வொட்டாதபடி தடுப்பது இருளாகிய ஆணவ மலத்தின் செயலாகும்.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 26

27 ஆணவம் உயிரின் குணம் அன்று

பதம் பிரித்துஉள்ளபடியே
இருள் இன்றேல் துன்பு என் உயிர் இயல் பேற் போக்கும்
பொருள் உண்டேல் ஒன்றாகப் போம்.
இருளின்றேல் துன்பென் னுயிரியல்பேற் போக்கும்
பொருளுண்டே லொன்றாகப் போம்.
பொருள் : ஆணவம் என்ற அக இருள் இல்லையாயின் உயிர்களுக்குத் துன்பம் உண்டாவதற்குக் காரணம் யாது? இந்த ஆணவம் உயிரின் குணம் என்றால், அதனைப் போக்கும் பொருளாகிய திருவருளால் அது கெடும் பொழுது, குணமாகிய அது கெடவே உயிரும் அதனோடு இல்லையாய் ஒழியும். ஆனால், முத்தி நிலையில் ஆணவம் மட்டுமே கெட, உயிர் அழியாதிருத்தலால் ஆணவம் உயிரின் குணமன்று. அஃது உயிருக்கு அநாதியே உள்ள குற்றம் என்பது புலனாகும்.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 27

28 ஆணவம் இடையில் வந்தது அன்று

பதம் பிரித்துஉள்ளபடியே
ஆசாதியேல் அணைவ காரணம் என் முத்தி நிலை
பேசாது அகவும் பிணி.
ஆசாதி யேலணைவ காரணமென் முத்திநிலை
பேசா தகவும் பிணி.
பொருள் : ஆணவ மலம் ஆகிய குற்றம் உயிரிடத்தில் முதலில் இல்லாமல் இடையிலே ஒரு காலத்தில் வந்து பற்றியது எனில், அவ்வாறு வந்து பற்றுவதற்குக் காரணம் யாது? (காரணம் இன்றியே வந்து பற்றியது என்று சொன்னால்) உயிர் முத்தி பெற்ற நிலையிலும் அவ் வாணவம் காரணமின்றி வந்து பற்றும் என்றாகும். காரணம் வேண்டாதபோது எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் அது சொல்லாமலே வந்து பற்றும் என்றாகி, முத்தி என்பதே இல்லையாகி விடும். ஆதலால் ஆணவ மலம் இடையிலே வந்ததன்று. அஃது உயிர்களிடத்தில் தொன்று தொட்டே உள்ளது.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 28

29 உயிரின் பக்குவ காலத்தில் ஆணவம் நீங்குவதாகும்

பதம் பிரித்துஉள்ளபடியே
ஒன்றும் மிகினும் ஒளி கவராதேல் உள்ளம்
என்றும் அகலாது இருள்.
ஒன்று மிகினு மொளிகவரா தேலுள்ள
மென்று மகலா திருள்.
பொருள் : உயிரிடத்தில் ஆணவ இருள் இப்பொழுது மிகுந்திருந்தாலும் உயிர் திருவருள் ஒளியைச் சிறிது சிறிதாகப் பெற்று அந்த ஆணவ இருளைப் படிப்படியாக நீக்கிக் கொள்ளும். அங்ஙனம் இறைவனது திருவருள் ஒளியை உயிர் உணரவில்லை என்றால் ஆணவ இருளினின்றும் அஃது என்றுமே விடுபடாது போகும்.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 29

30 மாயை யாகிய விளக்கு

பதம் பிரித்துஉள்ளபடியே
விடிவு ஆம் அளவும் விளக்கு அனைய மாயை
வடிவு ஆதி கன்மத்து வந்து.
விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாதி கன்மத்து வந்து.
பொருள் : மாயையினின்றும் உடம்பு முதலியவை தோன்றி உயிர்களைப் பொருந்துகின்றன. அவ்வாறு அவை வந்து பொருந்துவது அந்த அந்த உயிர்களின் வினைக்கு ஏற்பவேயாகும். ஆணவமாகிய இருள் நீங்கி விடிவு வரும் வரையிலும் மாயையின் காரியமாகிய இந்த உடம்பு முதலியவை உயிருக்கு விளக்குப் போல நின்று உதவுகின்றன.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 30

31 அருளே தலையாய பொருள்

பதம் பிரித்துஉள்ளபடியே
அருளில் பெரியது அகிலத்தில் வேண்டும்
பொருளிள் தலை இலது போல்.
அருளிற் பெரிய தகிலத்தில் வேண்டும்
பொருளிற் றலையிலது போல்.
பொருள் : உலகியலில் ஒருவன் ஒரு சமயத்தில் ஒரு பொருளைத் தனக்கு இன்றியமையாததாகக் கருதி விடுவானாயின் அவனுக்கு அந்தச் சமயத்தில் அந்தப் பொருள்தான் மிக உயர்ந்த பொருளாகத் தோன்றும். அதனைக் காட்டிலும் மேலான பொருள் வேறொன்றும் இருக்க முடியாது. அதுபோல ஆன்மீக நெறியிற் செல்லும் ஒருவன் திருவருளையே தனக்கு இன்றியமையாத பொருளாகக் கருதி அதனையே வேண்டி நிற்பான். அவனைப் பொறுத்தவரையில் திருவருளைக் காட்டிலும் மேலான பொருள் இவ்வுலகில் வேறொன்றும் இல்லை.

திருவருட்பயன் > நான்காம் அதிகாரம் > 4. அருளது நிலை > பாடல்: 31

32 அருள் பேரொளியாய் நிற்றல்

பதம் பிரித்துஉள்ளபடியே
பெருக்க நுகர்வினை பேர் ஒளியாய் எங்கும்
அருக்கன் என நிற்கும் அருள்.
பெருக்க நுகர்வினை பேரொளியா யெங்கு
மருக்கனென நிற்கு மருள்.
பொருள் : உலக மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டவும், பின் நுகரவும் துணை புரிந்து நிற்கும் சூரியன் பேரொளியாய் எங்கும் பரவி நிற்றல் போல, இறைவனது திருவருட் சத்தி உயிர்கள் நல்வினை தீவினைகளைச் செய்து புண்ணிய பாவங்களை ஈட்டவும் அவற்றின் பயன்களாகிய இன்ப துன்பங்களை நுகரவும் துணை செய்து பேரறிவாய் எங்கும் நிறைந்து நிற்கும்.

திருவருட்பயன் > நான்காம் அதிகாரம் > 4. அருளது நிலை > பாடல்: 32

33 அருளே உயிரையும் உடம்பையும் கூட்டுவித்தல்

பதம் பிரித்துஉள்ளபடியே
ஊன் அறியாது என்றும் உயிர் அறியாதது ஒன்றும் இவை
தான் அறியாது ஆர் அறிவார் தான்.
ஊனறியா தென்று முயிரறியா தொன்றுமிவை
தானறியா தாரறிவார் தான்.
பொருள் : உடம்பு சடம். அதற்கு எக்காலத்திலும் அறிவு இல்லை. ஆகவே அது தனக்குரிய உயிரை அறிந்து சென்று சேர மாட்டாது. உயிரும் இருள் மலத்தால் மூடப் பெற்று அறிவிழந்து நிற்கிறது. ஆகவே அதுவும் தனக்குரிய உடம்பை அறிந்து எடுத்துக் கொள்ளாது. அப்படியானால் இந்த உயிர் இன்ன உடம்பைப் பெறுதற்குரியது என்று அறிந்து கூட்டுவிப்பது எது? இவ்விரண்டையும் கூட்டிச் செயற்படுத்துவது திருவருளே யாகும். திருவருள் கூட்டுவிக்காமல் வேறு யார் அறிந்து கூட்டுவிக்க முடியும்?

திருவருட்பயன் > நான்காம் அதிகாரம் > 4. அருளது நிலை > பாடல்: 33

34 உயிர்கள் மயக்கவுணர்வால் திருவருளை அறியாமை

பதம் பிரித்துஉள்ளபடியே
பால் ஆழி மீன் ஆளும் பான்மைத்து அருள் உயிர்கள்
மால் ஆழி ஆளும் மறித்து.
பாலாழி மீனாளும் பான்மைத் தருளுயிர்கள்
மாலாழி யாளு மறித்து.
பொருள் : அருளை ஆதாரமாகக் கொண்டுள்ள உயிர்கள் அவ் வருளைப் பொருந்தி நின்று பேரின்பத்தை நுகர அறியாமல், மாயையின் காரியமாகிய உலகப் பொருள்களையே நுகர விரும்பி மயக்கமாகிய கடலில் ஆழ்ந்து போய் உள்ளன. இது, பாற்கடலில் உள்ள மீன்கள் அப்பாலை உண்ணும் பொருள் என்று அறியாமல் அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து உண்ணும் நிலையைப் போன்றது.

திருவருட்பயன் > நான்காம் அதிகாரம் > 4. அருளது நிலை > பாடல்: 34

35 பின்னே வரும் துணை

பதம் பிரித்துஉள்ளபடியே
அணுகு துணை அறியா ஆற்றோனில் ஐந்தும்
உணர்வை உணராது உயிர்.
அணுகு துணையறியா வாற்றோனி லைந்து
முணர்வை யுணரா துயிர்.
பொருள் : தனக்குப் பின்னே துணையாக வருகின்றவனை அறியாது தனி வழியில் அச்சத்துடன் நடந்து செல்லு<ம் வழிப்போக்கனைப் போல உயிர்கள் தமக்குத் தோன்றாத் துணையாய் பின்நின்று உதவும் பேரறிவாகிய திருவருளை உணராது துன்புறும். மற்றுமோர் உவமை கூறலாம். உயிர் உடன் நின்று செலுத்தவே ஐம்பொறிகள் செயற்படுகின்றன. ஆனால், அவ்வாறு தம்மைச் செலுத்தி நிற்கும் உயிரை அவை அறிவதில்லை. அந்த ஐம்பொறிகளைப் போல உயிர்கள் தமது அறிவிற்குத் துணையாய் உள்ள திருவருளை உணராது நிற்கும்.<

திருவருட்பயன் > நான்காம் அதிகாரம் > 4. அருளது நிலை > பாடல்: 35

36 திருவருளும் நிலமும்

பதம் பிரித்துஉள்ளபடியே
தரையை அறியாது தாமே திரிவோர்
புரையை உணரார் புவி.
தரையை யறியாது தாமே திரிவோர்
புரையை யுணரார் புவி.
பொருள் : நிலமே எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் இருந்து அனைத்தையும் தாங்கி நிற்கிறது. ஆயினும் மாந்தர் தம்மைத் தாங்கி நிற்பது நிலம் என்பதனைச் சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. நிலத்தின் உதவியை அறவே மறந்து தாமே தமக்கு ஆதாரம் என்று எண்ணித் திரிவர். அதுபோலத் திருவருள்தான் தம்மைத் தாங்கி நின்று நடத்துகிறது என்பதனைச் சிறிதும் உணராமல் உயிர்கள் இவ்வுலகில் வாழ்கின்றன.

திருவருட்பயன் > நான்காம் அதிகாரம் > 4. அருளது நிலை > பாடல்: 36

37 திருவருளை இழந்தவர்

பதம் பிரித்துஉள்ளபடியே
மலை கெடுத்தோர் மண் கெடுத்தோர் வான் கெடுத்தோர் ஞானம்
தலை கெடுத்தோர் தன் கேடர் தாம்.
மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலைகெடுத்தோர் தற்கேடர் தாம்.
பொருள் : திருவருள் உணர்வை இழந்தவர் மலையை இழந்தவரோடு ஒப்பர்; நிலத்தை இழந்தவரோடு ஒப்பர்; வானை இழந்தவரோடு ஒப்பர். அவர் தமக்குத் தாமே கேடு செய்து கொள்பவர் ஆவார்.

திருவருட்பயன் > நான்காம் அதிகாரம் > 4. அருளது நிலை > பாடல்: 37

38 திருவருளை உணராமல் தாமே முதல்வர் எனல்

பதம் பிரித்துஉள்ளபடியே
வெள்ளத்துள் நா வற்றி எங்கும் விடிந்து இருளாம்
கள்ளத் தலைவர் கடன்.
வெள்ளத்துள் நாவற்றி யெங்கும் விடிந்திருளாங்
கள்ளத் தலைவர் கடன்.
பொருள் : எங்கும் நிறைந்துள்ள திருவருள் இடத்திலேதான் எல்லா உயிர்களும் உள்ளன. ஆயினும் பொய்த் தலைவராகிய அந்த உயிர்கள் திருவருளால் வரும் பேரின்பத்தை நுகராமல் துன்புறுகின்றன. உயிர்களது இந்த நிலை, நல்ல நீர்ப் பெருக்கிலே நின்று கொண்டு ஒருவன் நீர் வேட்கையால் நா வறண்டு நிற்பதைப் போன்றது ஆகும். இதற்கு இன்னொரு உவமையும் கூறலாம். பொழுது விடிந்த பின்னும் அதனை உணராமல், இருள்வயப்பட்டு உறங்கிக் கிடப்பதைப் போன்றது திருவருளை உணராத நிலை என்றும் கூறலாம்.

திருவருட்பயன் > நான்காம் அதிகாரம் > 4. அருளது நிலை > பாடல்: 38

39 உயர்ந்ததை விட்டு இழிந்ததை நாடுதல்

பதம் பிரித்துஉள்ளபடியே
பரப்பு அமைந்து கேண்மின் இது பால் கலன் மேல் பூசை
கரப்பு அருந்த நாடும் கடன்.
பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூசை
கரப்பருந்த நாடுங் கடன்.
பொருள் : உலகப் பொருள்களின் மேல் பரந்து ஓடுகின்ற மனத்தை ஒரு நெறிப்படுத்தியாம் கூறுவதைக் கேளுங்கள். திருவருளை மறந்து உலகப் பொருள்களில் கிடைக்கும் அற்ப சுகத்தைப் பெறுதற்கு நீங்கள் விரைகிறீர்கள். இந்த விரைவு எது போன்றது எனில், பால் நிறைந்த கலத்தின் மேல் ஏறி அமர்ந்த பூனை அந்த பாலைப் பருக நினையாமல், சற்றுத் தொலைவில் காணப்படும் கரப்பான் என்னும் பூச்சியைப் பிடித்து உண்ணுதற்குக் கருதும் முறைமை போன்றதாகும்.

திருவருட்பயன் > நான்காம் அதிகாரம் > 4. அருளது நிலை > பாடல்: 39

40 திருவருளோடு பழகாத உயிர்

பதம் பிரித்துஉள்ளபடியே
இற்றை வரை இயைந்தும் ஏதும் பழக்கம் இலா
வெற்று உயிர்க்கு வீடு மிகை.
இற்றை வரையியைந்து மேதும் பழக்கமிலா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.
பொருள் : உயிர் அன்று தொட்டு இன்று வரையிலும் திருவருளோடு தான் கூடியிருக்கிறது. ஆயினும் அத்திருவருளைத் தெரிந்து கொள்ளாமல் அதனோடு சிறிதேனும் பழகுதல் இல்லாமல் இருக்கிறதே. இப்படிப் பயனின்றி வாழ்கின்ற இந்த உயிருக்கு வீடு பெற என்ன தகுதி இருக்கிறது?

திருவருட்பயன் > நான்காம் அதிகாரம் > 4. அருளது நிலை > பாடல்: 40

41 வெளிவந்து நிற்கின்ற அருள்தலைவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
அறியாமை உள் நின்று அளித்ததே காணும்
குறியாக நீங்காத கோ.
அறியாமை யுள்நின் றளித்ததே காணுங்
குறியாக நீங்காத கோ.
பொருள் : உயிர் பக்குவம் உறாதநிலையில் இறைவன் அவ்வுயிரின் உள்ளாக மறைந்து நின்று அவ்வுயிர் அறியாதபடி அதன் அறிவைச் சிறிது சிறிதாக வளர்த்து வருவான். அவ்வுயிர் உண்மையை உணர்ந்து கொள்ளும் பக்குவம் எய்திய பொழுது அவ்விறைவனே கண்ணால் காணும் வடிவினையுடைய ஞானாசிரியனாய்த் தோன்றி வந்து அப்பக்குவ ஆன்மாவுக்குத் திருவருளைத் தெளிய உணர்த்துவான்.

திருவருட்பயன் > ஐந்தாம் அதிகாரம் > 5. அருளுறு நிலை > பாடல்: 41

42 உள்ளிருந்து காண்பவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
அகத்து உறு நோயக்கு உள்ளினர் அன்றி அதனைச்
சகத்தவருங் காண்பரோ தான்.
அகத்துறுநோயக் குள்ளின ரன்றி யதனைச்
சகத்தவருங் காண்பரோ தான்.
பொருள் : வீட்டில் ஒருவர் நோயுற்றால் அவரது நோயின் தன்மையை அவ்வீட்டினுள் உள்ளவரே அறிவார். வெளியில் உள்ள பிறர் அதனை அறிவாரோ? அறியமாட்டார். அதுபோல, உயிரிடத்துப் பொருந்திய அறியாமையாகிய நோயினது நிலையை உயிரினுள் இருப்பவனாகிய இறைவனே அறிய வல்லான். உலகத்தவராகிய பிறர் அதனை எங்ஙனம் அறிதல் இயலும்?

திருவருட்பயன் > ஐந்தாம் அதிகாரம் > 5. அருளுறு நிலை > பாடல்: 42

43 குருவின் நிலையை உலகர் உணராமை

பதம் பிரித்துஉள்ளபடியே
அருளா வகையால் அருள் புரிய வந்த
பொருள் அர் அறிவார் புவி.
அருளா வகையா லருள்புரிய வந்த
பொருளா ரறிவார் புவி.
பொருள் : சிவமாகிய முதற்பொருளே நேர் நின்று அருளாமல் குரு வடிவில் மறைந்து நின்று அருள் செய்ய நினைந்து இவ்வாறு வந்திருக்கிறது என்பதை உலகத்தார் உணரமாட்டார்கள்.

திருவருட்பயன் > ஐந்தாம் அதிகாரம் > 5. அருளுறு நிலை > பாடல்: 43

44 உலகர் உணராமைக்குக் காரணம்

பதம் பிரித்துஉள்ளபடியே
பொய் இருண்ட சிந்தைப் பொறி இலார் போதம் ஆம்
மெய் இரண்டுங் காணார் மிக.
பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டுங் காணார் மிக.
பொருள் : ஆணவ மலமறைப்பினால் இருண்ட அறிவினையுடைய, பக்குவம் இல்லாத மாந்தர் ஞானமாகிய அருளையும் அறியார். அந்த அருளின் வடிவாகிய ஞானகுருவின் நிலையையும் அறியார்.

திருவருட்பயன் > ஐந்தாம் அதிகாரம் > 5. அருளுறு நிலை > பாடல்: 44

45 குருவடிவாகிய போர்வை

பதம் பிரித்துஉள்ளபடியே
பார்வை என மாக்களை முன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வை எனக் காணார் புவி.
பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.
பொருள் :

பழகிய விலங்கைக் காட்டிக் காட்டு விலங்குகளைக் கைப்பற்றுவதுபோல, இறைவன் நம்மைப் போல் இருப்பவராகிய ஞான குருவைக் கொண்டு பக்குவ ஆன்மாக்களை வயப்படுத்தி ஆட்கொள்ளுகிறான். இறைவன் தன்னை மறைத்துக் கொண்டு வரும் போர்வையே குருவடிவம் என்ற உண்மையை உலகத்தார் உணர மாட்டார்.

திருவருட்பயன் > ஐந்தாம் அதிகாரம் > 5. அருளுறு நிலை > பாடல்: 45

46 அருளாசிரியரின் இன்றியமையாமை

பதம் பிரித்துஉள்ளபடியே
எமக்கு என் எவனுக்கு எவை தெரியும் அவ் அவ்
தமக்கு அவனை வேண்டத் தவிர்.
எமக்கென் னெவனுக் கெவைதெரியு மவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.
பொருள் : எந்த ஒருவனுக்கு எந்தக் கலை தெரியுமோ அந்தக் கலையை அறிந்து கொள்வதற்கு அந்த ஒருவனது துணையையே நாட வேண்டியுள்ளது. அப்படியிருக்க, ஞானமாகிய அரிய பொருளை அறிய விரும்பும் நாம் அந்த ஞானத்தை உணர்த்தும் வல்லமையுடைய ஞானாசிரியரின் துணையை அல்லவா நாட வேண்டும்? அப்படிச் செய்யாமல், ஞானாசிரியரின் துணை இல்லாமலே ஞானத்தைப் பெறலாம் என்று கருதுவது பேதமையாகும்.

திருவருட்பயன் > ஐந்தாம் அதிகாரம் > 5. அருளுறு நிலை > பாடல்: 46

47 இருள் நீங்குவது குருவின் திருநோக்கால்

பதம் பிரித்துஉள்ளபடியே
விடம் நகிலம் மேவினும் மெய்ப் பாவகனின் மீளுங்
கடனில் இருள் போவது இவன் கண்.
விடநகிலம் மேவினுமெய்ப் பாவகனின் மீளுங்
கடனிலிருள் போவதிவன் கண்.
பொருள் : பாம்பு கடித்து ஏறிய நஞ்சானது, பாம்புக்குப் பகையாகிய கீரியே வந்து கடிபட்டவன் உடல் மீது விழுந்து புரண்டாலும் நீங்காது. ஆயின், மாந்திரிகன் ஒருவன் மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவித்து அந்த மந்திர வடிவேயாக நின்று பார்க்கும் பார்வையினால் அந்தவிடம் நீங்குவதாகும். உயிரில் உள்ள மலமாகிய இருள் நீங்குவதும் இம்முறைமையில் ஆகும். இறைவன் உயிர்க்கு உயிராக உடன் நின்ற போதிலும் <உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்குவதில்லை. இறைவனாய் நிற்கும் ஞான குருவின் திருநோக்கத்தாலேயே அது நீங்குவதாகும்.

திருவருட்பயன் > ஐந்தாம் அதிகாரம் > 5. அருளுறு நிலை > பாடல்: 47

48 மூவகை உயிர்களுக்கும் ஞானம் உணர்த்தும் முறை

பதம் பிரித்துஉள்ளபடியே
அகலத் தரும் அருளை ஆக்கும் வினை நீக்குஞ்
சகலர்க்கு வந்து அருளும் காண்.
அகலத் தருமருளை யாக்கும் வினைநீக்குஞ்
சகலர்க்கு வந்தருளுங் காண்.
பொருள் : இறைவன் விஞ்ஞானகலர் ஆகிய உயிர்களுக்கு உள்ளிருந்தே ஞானத்தை உணர்த்துவான்; பிரளயாகலர் ஆகிய உயிர்களுக்குத் தெய்வ வடிவில் முன்தோன்றி அவரைப் பிணித்துள்ள வினையை நீக்கி ஞானத்தை அருள்வான். சகலர் ஆகிய உயிர்களுக்கு ஆசிரியர் வடிவில் வந்து அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தை அருள்வான்.

திருவருட்பயன் > ஐந்தாம் அதிகாரம் > 5. அருளுறு நிலை > பாடல்: 48

49 ஞான நெறியை யார் அறிவார்?

பதம் பிரித்துஉள்ளபடியே
ஆர் அறிவார் எல்லாம் அகன்ற நெறி அருளும்
பேர் அறிவான் வாராத பின்.
ஆரறிவா ரெல்லா மகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.
பொருள் : ஆசை முதலிய குற்றங்களை யெல்லாம் அகன்றொழியச் செய்வது ஞானம். அப்படிப்பட்ட ஞானத்தைத் தர வல்லவன் முற்றறிவினை உடைய இறைவன் ஒருவனே. அவன் குருவாய் வந்து உணர்த்தாவிடின் மெய்யுணர்வாகிய ஞானத்தை யார்தாம் உணரமுடியும்?

திருவருட்பயன் > ஐந்தாம் அதிகாரம் > 5. அருளுறு நிலை > பாடல்: 49

50 அருட் குரு இன்றி ஞானம் வரும்!

பதம் பிரித்துஉள்ளபடியே
ஞானம் இவன் ஒழிய நண்ணி இடும் நல் கல் அனல்
பானு ஒழியப் படின்.
ஞான மிவனொழிய நண்ணியிடும் நற்கல்லனற்
பானு வொழியப் படின்.
பொருள் : சூரிய காந்தக் கல்லினிடத்தில் சூரியனது ஒளி படாமலே நெருப்புத் தோன்றுதல் கூடுமாயின், ஆன்மாவினிடத்தில் அருட்குரு இல்லாமலே ஞானம் தோன்றுதல் கூடும்.

திருவருட்பயன் > ஐந்தாம் அதிகாரம் > 5. அருளுறு நிலை > பாடல்: 50

51 அறியும் நெறிக்கு உரியவர்

பதம் பிரித்துஉள்ளபடியே
நீடும் இரு வினைகள் நேர் ஆக நேர் ஆதல்
கூடும் இறை சத்தி கொளல்.
நீடு மிருவினைகள் நேராக நேராதல்
கூடுமிறை சத்தி கொளல்.
பொருள் : முன்னே செய்து கொண்ட இருவினைகளின் பயன்களாய் வருகின்ற இன்பத் துன்பங்கள் ஆன்ம அறிவில் சமமாய் உணரப்படும் நிலை வருங்காலத்தில் அந்த ஆன்மா இறைவனது திருவருளைப் பெறுதல் கூடும்.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 51

52 நித்தப் பொருள்கள்ஆறு

பதம் பிரித்துஉள்ளபடியே
ஏகன் அநேகன் இருள் கருமம் மாயை இரண்டு
ஆக இவை ஆறு அதியில்.
ஏக னநேக னிருள்கரும மாயையிரண்
டாகவிவை யாறாதி யில்.
பொருள் : ஒருவனாகிய இறைவனும், பலவாகிய உயிரும், ஆணவமும், கன்மமும், சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு மாயையும் ஆகிய இந்த ஆறு பொருள்கள் தோற்றம் இல்லாதவையாகும்.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 52

53 பொருள்கள் தம்மில் இயைந்து நிற்றல்

பதம் பிரித்துஉள்ளபடியே
செய்வானும் செய் வினையும் சேர் பயனும் சேர்ப்பவனும்
உய்வானும் உளன் என்று உணர்.
செய்வானுஞ் செய்வினையுஞ் சேர்பயனுஞ் சேர்ப்பவனு
முய்வானு முளனென் றுணர்.
பொருள் : மாணவனே, வினையைச் செய்பவனாகிய நீயும், உன்னால் செய்யப்படுவனவாகிய இருவினைகளும், அவற்றின் பயன்களாகிய இன்பத் துன்பங்களும், அப்பயன்களை உன்னோடு கூட்டுவிப்பவனாகிய இறைவனும் என இம்முறையில் நீ பாசத்தோடும் பதியோடும் தொடர்பு கொண்டுள்ளாய். இவ்வாறு யான் உள்ளேன் என்று உன்னியல்பை உணர்வாயாக.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 53

54 உயிர் அருளோடு சேர்ந்து வாழும் ஒற்றுமை

பதம் பிரித்துஉள்ளபடியே
ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே ஊனொடு உயிர்
தான் உணர்வோடு ஒன்றாம் தரம்.
ஊனுயிரால் வாழு மொருமைத்தே யூனொடுயிர்
தானுணர்வோ டொன்றாந் தரம்.
பொருள் : உடம்போடு சேர்ந்து நிற்பதாகிய உயிர் நிறைந்த ஞானமாகிய திருவருளோடு பிரிப்பின்றிக் கூடி வாழ்கிறது. திருவருளோடு உயிர் சேர்ந்து வாழும் ஒற்றுமை எது போன்றது எனில், உயிரோடு கூடி வாழும் உடம்பு அந்த உயிரோடு கொண்டுள்ள ஒற்றுமையைப் போன்றது ஆகும்.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 54

55 பளிங்கிற்குப் பகலவன் போல உயிர்கட்குத் திருவருள்

பதம் பிரித்துஉள்ளபடியே
தன் நிறமும் பல் நிறமும் தானாம் கல் தன்மை தரும்
பொன் நிறம் போல் மன்னிறம் இப் பூ.
தன்னிறமும் பன்னிறமுந் தானாங்கற் றன்மைதரும்
பொன்னிறம்போல் மன்னிறமிப் பூ.
பொருள் : பளிங்குக் கல் தனக்குப் பக்கத்தில் உள்ள பல பொருள்களின் நிறங்களையும் கவர்ந்து அப் பன்னிறங்களையே தன் நிறமாகக் காட்டி நிற்கும். இனி, சூரியன் உச்சியில் வரும்போது, பக்கத்தில் பல பொருள்கள் இருப்பினும் பளிங்குக் கல் அவற்றின் நிறங்களைக் கவராமல் தன் ஒளியை மட்டுமே தோற்றி நிற்கின்ற நிலையும் உண்டு. இங்ஙனம், பிற பொருள்களின் நிறத்தைக் காட்டி நிற்றலும், தனது நிறத்தை மட்டும் காட்டி நிற்றலும் ஆகிய இரு தன்மைகள் பளிங்கிற்கு உண்டு என அறியலாம். பளிங்கிற்கு அவைமுறையே பொதுவியல்பும், தன்னியல்பும் ஆகும். அவ்விரு தன்மைகளையும் பளிங்கிற்குத் தருவது சூரியனது ஒளியேயாகும். சூரியவொளி இன்றேல் பளிங்கு பிற பொருள்களின் நிறங்களைக் கவர்தலும், தனது ஒளியை மட்டும் தோற்றி நிற்றலும் ஆகிய இரண்டும் இல்லையாம். அச்சூரியவொளி போன்றது இறைவனது திருவருள். திருவருளின் உதவியாலேயே உயிர்களுக்குக் கட்டு நிலையில் பொது வியல்பும், முத்திநிலையில் தன்னியல்பும் விளங்குகின்றன.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 55

56 இடையே நிற்கும் திருவருள்

பதம் பிரித்துஉள்ளபடியே
கண் தொல்லை காணும் நெறி கண் உயிர் நாப்பண் நிலை
உண்டு இல்லை அல்லது ஒளி.
கண்டொல்லை காணுநெறி கண்ணுயிர் நாப்பண்ணிலை
யுண்டில்லை யல்ல தொளி.
பொருள் : கண் தொன்று தொட்டுப் பொருளைக் கண்டு வரும் முறைமை, கண்ணிற்கும் உயிருக்கும் இடையே ஒளி நிற்பதனால் உண்டாகின்றது. அவ்வாறு ஒளி நில்லாவிடில் கண் பொருளைக் காணுதல் என்பது நிகழாது.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 56

57 நின் செயல் மன் செயல்

பதம் பிரித்துஉள்ளபடியே
புன் செயலினோடு புலன் செயல் போல் நின் செயலை
மன் செயலதாக மதி.
புன்செயலி னோடு புலன்செயல்போல் நின்செயலை
மன்செயல தாக மதி.
பொருள் : சிற்றின்பப் பொருள்களின் மேல் விரைந்து செல்லுகின்ற ஐம்பொறிகளின் செயல், உண்மையில், அப்பொறிகளைச் செலுத்துகின்ற உயிரின் செயலேயாகும். அதுபோல, மாணவனே, நீ செய்யும் செயல்கள் யாவும் உனக்கு முதலாகிய திருவருளின் செயல் என்றே அறிவாயாக.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 57

58 திருவருள் ஒளியைக் காணும் முறை

பதம் பிரித்துஉள்ளபடியே
ஓராதே ஒன்றையும் உற்று உன்னாதே நீ முந்திப்
பாராதே பார்த்ததனைப் பார்.
ஓராதே வொன்றையுமுற் றுன்னாதே நீமுந்திப்
பாராதே பார்த்ததனைப் பார்.
பொருள் : மனம், மொழி, மெய்களின் தொழிற்பாடாகிய முயற்சிகளுள் யாதொன்றையும் உன்னுடையதாகக் கருதாதே. அம் முயற்சியால் விளையும் நலம் தீங்குகளை உன்னுடையனவாகக் கொண்டு அவற்றில் அழுந்தாதே. தற்போதம் நீங்கிய இடத்து வேறற விளங்கி நிற்பதாகிய திருவருளை உனது தற்போதத்தினால் காண முற்படாதே. உன்னறிவில் நிலைத்து நின்று உன்னைக் கண்டு வருவதாகிய அத்திருவருளை மனம் அசைவற நின்று காண்பாயாக.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 58

59 ஒளிக்குள் ஒளிந்து நில்!

பதம் பிரித்துஉள்ளபடியே
களியே மிகு புலமாய்க் கருதி ஞான
ஒளியே ஒளியாய் ஒளி.
களியே மிகுபுல மாய்க்கருதி ஞான
வொளியே வொளியா வொளி.
பொருள் : ஞானமாகிய அருள் வழியாக உண்டாகும் இன்பத்தையே அடையத்தக்க மேலான பேரின்பமாக உணர்ந்து, அத்திருவருள் ஞானத்தையே பற்றாகப் பற்றி நின்று, அந்த ஞான ஒளிக்குள் புகுந்து நீ ஒளிந்து நிற்பாயாக.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 59

60 திருவருளின் வசப்பட்டிரு

பதம் பிரித்துஉள்ளபடியே
கண்டபடியே கண்டு காணாமை காணாமல்
கொண்டபடியே கொண்டு இரு.
கண்டபடி யேகண்டு காணாமை காணாமற்
கொண்டபடி யேகொண் டிரு.
பொருள் : மாணாக்கனே, அறியாமையாகிய கேவலம் வந்து பொருந்தாதவாறு, கருவிகளை உனக்கு வேறாகக் கண்டு நீங்கித் திருவருள் ஞானத்தைப் பற்றி நின்றாய். பின்னும் அவ்வாறு அதனையே விடாது பற்றி நிற்பாயாக. அவ்வாறு நின்றால் அத்திருவருள் உன்னைத் தன்னிடத்து அடக்கிக் கொள்ளும். அது உன்னை விழுங்கிக் கொள்ளுமாறு அதற்கு இசைந்த நிலையினையே நீயும் மேற்கொண்டிரு.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 60

61 அதுவாய் நிற்றல்

பதம் பிரித்துஉள்ளபடியே
தூ நிழல் அர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இது போல்
தான் அதுவாய் நிற்கும் தரம்.
தூனிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல்
தானதுவாய் நிற்குந் தரம்.
பொருள் : வெயிலில் அலைந்து வருந்தியவன் குளிர்ந்த நிழலை உடைய இடத்தைக் கண்டால் பிறர் சொல்லாதிருக்கவும் தானே அவ்விடத்தை அடைந்து நிழலில் அடங்கி நின்று இன்புறுவான். அதுபோல, அறியும் நெறியால் திருவருளை உணர்ந்த உயிர் தான் வேறாய் நில்லாமல் அத்திருவருளோடு ஒன்றுபட்டு அதனுள் அடங்கி அதுவேயாய் நிற்கும்.

திருவருட்பயன் > ஏழாம் அதிகாரம் > 7. உயிர் விளக்கம் > பாடல்: 61

62 கசப்பும் இனிப்பும்

பதம் பிரித்துஉள்ளபடியே
தித்திக்கும் பால் தானும் கைக்குந் திருந்திடும் நாப்
பித்தத்தில் தான் தவிர்ந்த பின்.
தித்திக்கும் பாடானுங் கைக்குந் திருந்திடுநாப்
பித்தத்தி டான்டவிர்ந்த பின்.
பொருள் : பால் தித்திப்பாக இருப்பது அதன் இயற்கை. அந்த இயற்கைக்கு மாறாகப் பால் கசப்பது நாவில் சேர்ந்த பித்தம் என்னும் செயற்கையினால் ஆகும். பித்தமாகிய செயற்கை நீங்கியபோது பால் இயற்கையான தித்திப்பையே உடையதாகும். அதுபோல, உயிருக்கு என்றும் உறவுப் பொருளாக இருப்பது திருவருள். அவ்வியல்புக்கு மாறாகத் திருவருள் பகைப் பொருளாக உயிர்க்குத் தோன்றுதல் அவ்வுயிரைப் பற்றியுள்ள ஆணவ மலமாகிய செயற்கையினால் ஆகும். அச்செயற்கை நீங்கியபோது, திருவருள் இயற்கையான உறவுப் பொருளாகவே தோன்றும்.

திருவருட்பயன் > ஏழாம் அதிகாரம் > 7. உயிர் விளக்கம் > பாடல்: 62

63 பொய்க்கருத்து

பதம் பிரித்துஉள்ளபடியே
காண்பான் ஒளி இருளி்ல் காட்டிடவும் தான் கண்ட
வீ்ண் பாவம் எந்நாள் விடும்.
காண்பா னொளியிருளி்ற் காட்டிடவுந் தான்கண்ட
வீ்ண்பாவ மெந்நாள் விடும்.
ம் தான்கண்ட
வீண் பாவம் என்னாய் விடும்?

பொருள் : ஒருவன் இருளில் நிற்குங் காலத்தில் ஒளி தோன்றி எப்பொருளையும் அவன் காணுமாறு அவற்றை அவனுக்குக் காட்டுகிறது. ஆனால், அவன் அவ்வொளியினாலேயே தான் கண்டதாக எண்ணுவதில்லை. தானே கண்டு விட்டதாகக் கருதிக் கொள்கிறான். அதுபோலப் பெத்த நிலையிலும், முத்தி நிலையிலும் உயிர் யாதொன்றையும் அறியும் படியாகத் திருவருளே அறிவித்து வருகிறது. யாதொரு செயலையும் செய்யும்படியாகத் திருவருளே செய்வித்து வருகிறது. ஆனால், உயிர் திருவருளாலேயே தனக்கு அறிவும் செயலும் நிகழ்கின்றன என்பதை எண்ணுவதில்லை. தானே அறிந்தும் செய்தும் வருவதாகக் கருதுகிறது. இது பொய்யான கருத்தாகும். இப்பொய்க் கருத்து என்ன பயனைச் செய்யும்?

திருவருட்பயன் > ஏழாம் அதிகாரம் > 7. உயிர் விளக்கம் > பாடல்: 63

64 அருள் இருளையொக்கும்!

பதம் பிரித்துஉள்ளபடியே
ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை
தெளிவு தெளியார் செயல்.
ஒளியு மிருளு மொருமைத்துப் பன்மை
தெளிவு தெளியார் செயல்.
பொருள் : ஒளியும், இருளும் ஒரு வகையில் ஒத்த தன்மை உடையனவாம். அஃதாவது, சூரியனுடைய பேரொளியை நோக்கும் போதும் கண் தெரியாது. இருளிலும் கண் தெரியாது. ஒளியில் அழுந்தியபோதும், இருளில் அழுந்தியபோதும் கண் பிற பொருள்களைக் காண மாட்டாததாகிறது. இஃது ஒப்புமை. இனி இரண்டிடத்திலும் கண் செயலற்று விடினும் இரண்டும் ஒன்றாவதில்லை. இரண்டிற்கும் என்ன வேறுபாடு எனில், ஒன்று ஒளியால் நிகழ்கின்ற தெளிந்த நிலை. மற்றொன்று இருளால் விளைகின்ற தெளியா நிலை.

திருவருட்பயன் > ஏழாம் அதிகாரம் > 7. உயிர் விளக்கம் > பாடல்: 64

65 எடுத்துச் சுமப்பான்!

பதம் பிரித்துஉள்ளபடியே
கிடைக்கத் தகுமே நல் கேண்மையார்க்கு அல்லால்
எடுத்துச் சுமப்பானை இன்று.
கிடைக்கத் தகுமேநற் கேணமையார்க் கல்லா
லெடுத்துச் சுமப்பானை யின்று.
பொருள் : இறைவன், தம் செயலற்று நிற்கும் அன்பரை எவ்விடத்தும் தாங்கிக் காப்பான்; அவரைத் தன் மேல் வைத்துச் சுமந்து செல்லும் துணைவனாய் இருப்பான். இப்படிப்பட்ட துணை வனை ஏனையோர் பெறுதல் கூடுமோ?

திருவருட்பயன் > ஏழாம் அதிகாரம் > 7. உயிர் விளக்கம் > பாடல்: 65

66 அருள்நிதி

பதம் பிரித்துஉள்ளபடியே
வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதி கவரத்
துஞ்சினனோ போயினனோ சொல்.
வஞ்ச முடனொருவன் வைத்த நிதிகவரத்
துஞ்சினனோ போயினனோ சொல்.
பொருள் : ஒருவன் வைத்துள்ள நிதியை மற்றொருவன் கள்ளமாய்க் கவர்ந்து கொள்வதற்கு, வைத்திருப்பவன் உறங்கி விட்டானோ? அல்லது அவ்விடத்தை விட்டுப் போய்விட்டானோ? சொல்வாயாக.

திருவருட்பயன் > ஏழாம் அதிகாரம் > 7. உயிர் விளக்கம் > பாடல்: 66

67 பளிங்குத் தூண்

பதம் பிரித்துஉள்ளபடியே
தனக்கு நிழல் இன்றாம் ஒளி கவரும் தம்பம்
எனக் கவர நில்லாது இருள்.
தனக்கு நிழலின்றா மொளிகவருந் தம்ப
மெனக்கவர நில்லா திருள்.
பொருள் : உச்சிவேளையில் பளிங்குத் தூண் பிற பொருள்களின் நிழல்கள் தன்னிடத்தில் படியாதபடி சூரியவொளி ஒன்றையே கவர்ந்து நிற்கும். அப்பளிங்குத் தூண்போல், உயிர் தன்னிடத்தில் பிற உணர்வுகள் சிறிதும் எழாதபடி திருவருள் ஒன்றையே முழுதுமாகப் பற்றி நிற்குமாயின் மலஇருள் அடியோடு நீங்குவதாகும்.

திருவருட்பயன் > ஏழாம் அதிகாரம் > 7. உயிர் விளக்கம் > பாடல்: 67

68 பின் நிற்றல்

பதம் பிரித்துஉள்ளபடியே
உற்கை தரும் பொன் கை உடையவர் போல் உண்மைப் பின்
நிற்க அருளார் நிலை.
உற்கைதரும் பொற்கை யுடையவர்போ லுண்மைப்பின்
னிற்க வருளார் நிலை.
பொருள் : இருளில் நடப்போர் தீப்பந்தத்தை ஏந்தி வருகிறவன் முன்னே செல்லத் தாம் அவன் பின்னே செல்வர். அதுபோலப் பாசப் பற்றாகிய இருளை விலக்கி ஞானநெறியிற் செல்லும் உயிர்களுக்கு உதவியாக இறைவன் தனது திருவருள் ஒளியை வழங்கி வருகின்றான். உயிர் அவனுக்குப் பின் நிற்றலே திருவருளை முற்றப் பெறும் முறையாகும்.

திருவருட்பயன் > ஏழாம் அதிகாரம் > 7. உயிர் விளக்கம் > பாடல்: 68

69 கருவிகளும் உயிரறிவும் அறியா

பதம் பிரித்துஉள்ளபடியே
ஐம்புலனால் தாம் கண்டது என்றால் அது ஒழிய
ஐம்புலனார் தாம் ஆர் அதற்கு.
ஐம்புலனாற் றாங்கண்ட தென்றா லதுவொழிய
வைம்புலனார் தாமா ரதற்கு.
பொருள் : உயிர் ஐம்பொறி முதலிய கருவிகளைக் கொண்டு அறிந்து வந்ததெல்லாம் மெய்ப் பொருளாகிய சிவம் நீங்கலாக ஏனையவற்றையேயாம். அப்படியிருக்க, முத்திக் காலத்தில் அம்மெய்ப் பொருளை அறிவதற்கு அக்கருவிகள் துணையாதற்கு என்ன உரிமையுடையன? இனி, அக்கருவிகள் இன்றி ஒன்றையும் அறிய மாட்டாத உயிர்களும் தனியாய் நின்று அம்மெய்ப் பொருளை அறிதற்கு என்ன உரிமையுடையன?

திருவருட்பயன் > ஏழாம் அதிகாரம் > 7. உயிர் விளக்கம் > பாடல்: 69

70 உயிர் தனது வலிமையால் பெற முடியாது

பதம் பிரித்துஉள்ளபடியே
தாமே தருபவரைத் தம் வலியினால் கருதல்
ஆமே இவன் அர் அதற்கு.
தாமே தருபவரைத் தம்வலியி னாற்கருத
லாமே யிவனா ரதற்கு.
பொருள் : முதல்வன் தானே தனது கருணையினால் உயிருக்கு ஞானத்தைத் தந்து தன்னை உணர்த்தி நிற்கிறான். அங்ஙனமாக, அம்முதல்வனை உயிர் தானே தன் முயற்சியினால் அடைந்ததாகக் கருதுவது பொருந்துமோ? முதல்வனை இவ்வுயிர் தனது வலிமையால் பெறுவதற்கு என்ன உரிமையுடையது.

திருவருட்பயன் > ஏழாம் அதிகாரம் > 7. உயிர் விளக்கம் > பாடல்: 70

71 பின் புகுவார் இன்புறுவார்

பதம் பிரித்துஉள்ளபடியே
இன்புறுவார் துன்பார் இருளின் எழும் சுடரின்
பின் புகுவார் முன் புகுவார் பின்.
இன்புறுவார் துன்பா ரிருளி னெழுஞ்சுடரின்
பின்புகுவார் முன்புகுவார் பின்.
பொருள் : பக்குவம் வருவதற்கு முன்னே, துன்பம் தரும் இருளில் வழி காட்டி வருகின்ற திருவருள் ஒளிக்கு முன்னால் சென்றவர், பக்குவம் வந்த காலத்தில் அதன் பின்னால் செல்வர்; அவ்வாறு பின் சென்று பேரின்பமாகிய பயனை அடைவர்.

திருவருட்பயன் > எட்டாம் அதிகாரம் > 8. இன்புறு நிலை > பாடல்: 71

72 அருள்நிலைக்கு அப்பால் உள்ளது

பதம் பிரித்துஉள்ளபடியே
இருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம்
ஒருவன் ஒருத்தி உறின்.
இருவர் மடந்தையருக் கென்பயனின் புண்டா
மொருவ னொருத்தி யுறின்.
பொருள் : பெண் பாலார் இருவர் சேர்வதிலே இன்பம் இல்லை. பெண் மகள் ஒருத்தியும் ஆடவன் ஒருவனும் கூடும் கூட்டத்திலேயே இன்பம் உண்டாகும். அதுபோல, உயிர் அருளோடு சேரும் நிலையில் இன்பமில்லை. உயிர் அருளுக்கு முதலாகிய, சிவத்தோடு கூடும் போதே பேரின்பம் விளையும்.

திருவருட்பயன் > எட்டாம் அதிகாரம் > 8. இன்புறு நிலை > பாடல்: 72

73 முதல்வனுக்கு இன்ப நுகர்ச்சியில்லை

பதம் பிரித்துஉள்ளபடியே
இன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம்
இன்ப கனம் ஆதலினால் இல்.
இன்பதனை யெய்துவார்க் கீயு மவர்க்குருவ
மின்பகன மாதலினா லில்.
பொருள் : தன்னை அடைந்தார்க்கு இன்பத்தை வழங்குகின்ற இறைவன் இன்பமயமான வடிவினன். அப்படிப்பட்ட அவன் அவ்வின்பத்தைத் தான் நுகர்தல் என்பது இல்லை.

திருவருட்பயன் > எட்டாம் அதிகாரம் > 8. இன்புறு நிலை > பாடல்: 73

74 இன்பக் கூடலுக்கு உவமை

பதம் பிரித்துஉள்ளபடியே
தாள் தலை போல் கூடி அவை தான் நிகழா வேறு இன்பக்
கூடலை நீ ஏகம் எனக் கொள்.
தாடலைபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக்
கூடலைநீ யேகமெனக் கொள்.
பொருள் : தாள், தலை என்னும் இரு சொற்கள் புணர்ந்து, இரண்டாகக் காணப்படுதல் இன்றித் தாடலை என ஒரு சொல்லாய் நிற்கின்றன. இச் சொற்புணர்ச்சி போல உயிரும் சிவமும் ஆகிய இரண்டும் தம்முட் கலந்து வேறாய் நில்லாத பேரின்பப் புணர்ச்சியையே ஒன்றாதல் ஆகிய முத்திநிலை என்று நீ கொள்வாயாக. மாணவனை முன்னிலைப்படுத்தி ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்.

திருவருட்பயன் > எட்டாம் அதிகாரம் > 8. இன்புறு நிலை > பாடல்: 74

75 முத்தியில் உயிரும் சிவமும் நிற்கும் முறைமை

பதம் பிரித்துஉள்ளபடியே
ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஒசை எழாது
என்றால் ஒன்று அன்று இரண்டும் இல்.
ஒன்றாலு மொன்றா திரண்டாலு மோசையெழா
தென்றாலொன் றன்றிரண்டு மில்.
பொருள் : உயிரும் கடவுளும் பொருளால் ஒன்றே எனில், முத்தியில் ஒன்றுதல் என்பது நிகழாது. ஒன்றுதலாவது இரு பொருள்களின் செயலாகும். பொருள் ஒன்றே உள்ளது என்றால், ஒன்றுதல் என்பது எப்படி நிகழ முடியும்? இனி, முத்தியில் உயிரும் கடவுளும் இரண்டாய் நிற்கும் என்றலும் பொருந்தாது. அவை இரண்டாய்ப் பிரிந்து நிற்பின் அங்கே ஒன்றுதல் என்னும் பேச்சு எழுவதற்கே வழியில்லை. இதனால், முத்தியில் உயிர் இறைப்பொருளோடு ஒன்றாய்ப் போய் விடாமலும், உயிரும் இறைவனும் தம்முள் இயையாத வேறுபட்ட இரண்டு பொருள்களாய் நில்லாமலு<ம், உயிர் இறைவனோடு கலப்பினால் ஒன்றாய் நின்று பேரின்பத்தை நுகரும் என்பது பெறப்படும்.

திருவருட்பயன் > எட்டாம் அதிகாரம் > 8. இன்புறு நிலை > பாடல்: 75

76 உற்றார், பெற்றார், பற்றார்

பதம் பிரித்துஉள்ளபடியே
உற்றாரும் பெற்றாரும் ஓவாது உரை ஒழியப்
பற்றாரும் அற்றார் பவம்.
உற்றாரும் பெற்றாரு மோவா துரையொழியப்
பற்றாரு மற்றார் பவம்.
பொருள் : தாம் வேறு நில்லாது திருவருளிற் பொருந்தி அதனோடு ஒன்றாய் நின்றவரும், அதன்மேல் சிவப் பேற்றினை எய்தி நிட்டையில் நின்றவரும் மெய்ப் பொருளை ஒருபோதும் நீங்க மாட்டார். அவர்க்கு இனிப் பிறவி இல்லை. இந்த உற்றாரும், பெற்றாரும் போல மெய்ப் பொருள் ஒன்றையே பற்றமாட்டாமல் கேட்டல், சிந்தித்தல் என்ற படிநிலைகளில் நிற்ப வரும் மேற்படிகளை எய்திப் பிறவி அறும் நிலையைப் பெறுவார்கள்.

திருவருட்பயன் > எட்டாம் அதிகாரம் > 8. இன்புறு நிலை > பாடல்: 76

77 தன் செயல் அறுதல்

பதம் பிரித்துஉள்ளபடியே
பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி
நீ ஒன்றும் செய்யாது நில்.
பேயொன்றுந் தன்மை பிறக்கு மளவுமினி
நீயொன்றுஞ் செய்யாது நில்.
பொருள் : மாணவனே, பேய் வசப்பட்டாரது தன்மை போல அருள் வயப்பட்டு நிற்கும் தன்மை உனக்கு உண்டாகும் வரையும், நீ தன் முனைப்போடு யாதொரு செயலு<ம் செய்யாமல் நிற்பாயாக.

திருவருட்பயன் > எட்டாம் அதிகாரம் > 8. இன்புறு நிலை > பாடல்: 77

78 உறங்குபவன் கைப் பொருள்

பதம் பிரித்துஉள்ளபடியே
ஒள் பொருள் கண் உற்றார்க்கு உறு பயனே அல்லாது
கண் படுப்போர் கைப் பொருள் போல் காண்.
ஒண்பொருட்க ணுற்றார்க் குறுபயனே யல்லாது
கண்படுப்போர் கைப்பொருள்போற் காண்.
பொருள் : மெய்ப் பொருளாகிய சிவத்தில் அழுந்தினவர்களுக்கு அதனால் வரும் பேரின்பம் ஒன்று தவிர ஏனையவெல்லாம், உறங்கிப் போனவனது கையிலுள்ள பொருள் தானே நழுவுவது போலத் தாமே நீங்கிவிடும்.

திருவருட்பயன் > எட்டாம் அதிகாரம் > 8. இன்புறு நிலை > பாடல்: 78

79 மூன்றாய தன்மை தோன்றாமை

பதம் பிரித்துஉள்ளபடியே
மூன்றாய தன்மை அவர் தம்மின் மிக முயங்கித்
தோன்றாத இன்பம் அது என் சொல்.
மூன்றாய தன்மையவர் தம்மின் மிகமுயங்கித்
தோன்றாத வின்பமதென் சொல்.
பொருள் : சிவனும் உயிரும் ஆகிய அவ்விருவரும் தம்முள் மிகவும் கலந்து ஒன்றாய் நின்ற அந்நிலையில் உயிர் பேரின்பத்தை நுகரும். அவ்வின்ப அனுபவத்தில் அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்றும் இருந்தாலும் அம்மூன்றும் வெவ்வேறாகத் தோன்றுவது இல்லை. மூன்று பொருள் என்ற வேறுபாடு தோன்றாத ஒருமை நிலை அது. உயிர் தன்னை மறந்து, தனது அறிவை மறந்து சிவம் ஒன்றையே அறிந்து அதில் அழுந்தியிருக்கும். அவ்வின்ப அனுபவம் இன்னவாறு இருந்தது என்று எவ்வாறு சொல்ல இயலும்?

திருவருட்பயன் > எட்டாம் அதிகாரம் > 8. இன்புறு நிலை > பாடல்: 79

80 அன்பும் இன்பும்

பதம் பிரித்துஉள்ளபடியே
இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம்
அன்பு நிலையே அது.
இன்பி லினிதென்ற லின்றுண்டே லின்றுண்டா
மன்பு நிலையே வது.
பொருள் : இன்பங்கள் எல்லாவற்றிலும் இனிமையுடையது எனச் சிறப்பிக்கப்படும் முத்தியின்பத்தை இப்பிறப்பிலேயே பெறலாம். அதற்கு முன்னே ஆன்மா ஒன்றைப் பெறவேண்டும். அந்த ஒன்று எது எனில், இறைவனிடத்தில் இடையறாது அன்பு செய்து நிற்கும் நிலையேயாகும். இந்த அன்பு நிலை இன்று உண்டானால், பேரின்பமும் இப்பொழுதே உண்டாகும்.

திருவருட்பயன் > எட்டாம் அதிகாரம் > 8. இன்புறு நிலை > பாடல்: 80

81 அனைத்து நூற்பொருளும் ஐந்தெழுத்தின் பொருளேயாம்

பதம் பிரித்துஉள்ளபடியே
அருள் நூலும் ஆரணமும் அல்லாது ஐந்தின்
பொருள் நூல் தெரியப் புகின்.
அருணூலு மாரணமு மல்லாது மைந்தின்
பொருணூ டெரியப் புகின்.
பொருள் : அருள் நூலாகிய ஆகமங்களும், அற நூலாகிய வேதங்களும், இவையல்லாத பிற நூல்களும் ஆகிய யாவும் திருவைந்தெழுத்தின் பொருளை விளக்கும் நூல்களேயாம்.

திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 81

82 ஐந்தெழுத்தில் நிற்கும் பொருள்கள்

பதம் பிரித்துஉள்ளபடியே
இறை சத்தி பாசம் எழில் மாயை ஆவி
உற நிற்கும் ஓங்காரத்து உள்.
இறைசத்தி பாச மெழில் மாயை யாவி
யுறநிற்கு மோங்காரத் துள்.
பொருள் : ஓங்காரத்தின் பரிணாமம் ஆகிய ஐந்தெழுத்தில் இறையும், அதன் சத்தியும், தளையாகிய ஆணவமும், எழில் மிக்க மாயையும், ஆன்மாவும் என்பவை பொருளாகப் பொருந்தி நிற்கும்.

திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 82

83 இரு வகை நடனம்

பதம் பிரித்துஉள்ளபடியே
ஊன நடனம் ஒருபால் ஒரு பாலாம்
ஞான நடனம் தான் நடுவே நாடு.
ஊன நடன மொருபா லொருபாலாம்
ஞானநடனந் தானடுவே நாடு.
பொருள் : சிவாய நம என்னும் திருவைந்தெழுத்தில் ஊன நடனத்தைக் குறிக்கும் பொருள்கள் ஒரு பக்கம் சேர்ந்திருக்க, ஞான நடனத்தைச் செய்யும் பொருள்கள் மற்றொரு பக்கம் சேர்ந்திருக்க, அந்நடனங்களால் பயன் அடைகின்ற உயிர் அவ்விரு பொருள்களுக்கும் இடையே நிற்கும். மாணவனே, இதனை ஆராய்ந்து உணர்வாயாக.

திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 83

84 இருவகை நடனத்தாலும் விளைவன

பதம் பிரித்துஉள்ளபடியே
விரியமந மேவி யவ்வை மீள விடா சித்தம்
பெரிய வினை தீரில் பெறும்.
விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம்
பெரியவினை தீரிற் பெறும்.
பொருள் : ஆணவ மலமும், அது காரணமாகத் திரோதான சத்தி, மாயை, கன்மம் ஆகியனவும் உயிரை அழுத்தமாகப் பற்றியுள்ளன. அவை தம்மினின்றும் உயிரை மீண்டு போக விடுவதில்லை. உயிரினது பழவினை முழுதும் கெடுமாயின் உயிர் ஞானம் பெற்று அவற்றினின்றும் மீண்டு சிவத்தை அடையும்.

திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 84

85 ஊன நடனத்தால் பாசநிலை நீங்காமை

பதம் பிரித்துஉள்ளபடியே
மாலார் திரோதம் மலம் முதலாய் மாறுமோ
மேல் ஆகி மீளா விடின்.
மாலார் திரோத மலமுதலாய் மாறுமோ
மேலாகி மீளா விடின்.
பொருள் : மயக்கம் பொருந்திய திரோதான சத்தியைக் குறிக்கின்ற நகாரமும், ஆணவ மலத்தைக் குறிக்கின்ற மகாரமும் முதலாய் நிற்க, சிவத்தைக் குறிக்கின்ற சிகாரம் முதலாகும் படி மீளுதல் இல்லையென்றால் பாசநிலை நீங்குமோ? நீங்காது.

திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 85

86 உலகப்பற்று இரங்கத்தக்கது

பதம் பிரித்துஉள்ளபடியே
ஆராதி ஆதாரம் அந்தோ அது மீண்டு
பாராது மேல் ஓதும் பற்று.
ஆராதி யாதார மந்தோ வதுமீண்டு
பாராது மேலோதும் பற்று.
பொருள் : விசேடதீக்கை பெற்ற மாணவனே, நீ எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் உள்ள சிவத்தை வழிபடு. (அஃதாவது, சிகாரத்தை முதலாக வைத்துத் திருவைந்தெழுத்தை ஓது). அவ்வாறு சிகாரம் முதலாக மீளுமாறு ஓதாமல் மேலும் மேலும் நகாரத்தை முற்படக் கொண்டு ஓதுவதற்கு ஏதுவாகிய உலகப்பற்று, அந்தோ! மிகவும் இரங்கத்தக்கது.

திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 86

87 பிறவி நீங்க

பதம் பிரித்துஉள்ளபடியே
சிவ முதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவம் இது நீ ஒதும் படி.
சிவமுதலே யாமாறு சேருமே றீரும்
பவமிதுநீ யோதும் படி.
பொருள் : திருவைந்தெழுத்தில் சிகாரம் வகாரம் என்னும் இரண்டும் முதலில் வருமாறு உச்சரித்தல் கூடுமாயின் பிறவி நீங்கும். பிறவிக்கு அஞ்சுகின்ற நீ ஓத வேண்டிய முறைமை இதுவாகும்.

திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 87

88 யவ்வை வாழ்விக்கும்

பதம் பிரித்துஉள்ளபடியே
வாசி அருளியவை வாழ்விக்கும் மற்றறு அவே
ஆசு இல் உருவமும் ஆம் அங்கு.
வாசி யருளியவை வாழ்விக்கு மற்றதுவே
யாசி லுருவமுமா மங்கு.
பொருள் : முத்தி பஞ்சாக்கரத்தில், வகாரமாகிய திருவருள் சிகாரமாகிய சிவத்தைக் காட்டி யகாரமாகிய ஆன்மாவை வீட்டின்பத்தில் இருத்தும். மேலும், அந்தத் திருவருளே அம்முத்தி நிலையில் ஆன்மாவிற்குக் குற்றமற்ற உடம்பாயும் நிற்கும்.

திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 88

89 வாசியிடை நிற்கை

பதம் பிரித்துஉள்ளபடியே
ஆசில் நவா நாப்பண் அடையாது அருளினால்
வாசி இடை நிற்கை வழக்கு.
ஆசினவா நாப்பண் ணடையா தருளினால்
வாசியிடை நிற்கை வழக்கு.
பொருள் : திரோதானத்தைக் குறிப்பதாகிய நகாரத்திற்கும் அருளைக் குறிப்பதாகிய வகாரத்திற்கும் இடையே ஆன்ம எழுத்தாகிய யகாரம் நில்லாமல், அவ்வகாரத்திற்கும் சிவத்தைக் குறிப்பதாகிய சிகாரத்திற்கும் இடையில் நிற்றலே முத்தி முறைமையாகும்.

திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 89

90 நிலையால் பலவகைப்படுதல்

பதம் பிரித்துஉள்ளபடியே
எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று
நில்லா வகையை நினைந்து.
எல்லா வகையு மியம்புமிவ னகன்று
நில்லா வகையை நினைந்து.
பொருள் : ஆன்மா பாசத்தினின்றும் உடனே நீங்க மாட்டாமல் படி முறையிலே சிறிது சிறிதாகவே நீங்கும் இயல்புடையது. அதனைக் கருதியே ஆகமங்கள் திருவைந்தெழுத்தினை ஒருபடியாகக் கூறாமல் இங்ஙனம் படிமுறைக்கு ஏற்பப் பல வகையாக அமைத்துக் கூறுகின்றன.

திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 90

91 பேசா அனுபூதி

பதம் பிரித்துஉள்ளபடியே
ஓங்கு உணர்வில் உள்ளடங்கி உள்ளத்தில் இன்பு ஒடுங்கத்
தூங்குவர் மற்று ஏது உண்டு சொல்.
ஓங்குணர்வி லுள்ளடங்கி யுள்ளத்தி லின்பொடுங்கத்
தூங்குவர்மற் றேதுண்டு சொல்.
பொருள் : சீவன் முத்தராகிய ஞானிகள் தமது உணர்வில் மேம்பட்டு விளங்குகின்ற சிவனது ஞானமாகிய திருவருளின் உள்ளே அடங்கி நிற்பர். அங்ஙனம் அடங்கி நிற்றலால் விளைகின்ற பேரின்பம் அவர் அறிவினிடத்தே ததும்பி நிறைந்து நிற்கும். அவ்வின்பத்தையே நுகர்ந்து திளைத்து வேறொன்றையும் அறியாதிருப்பர். அந்நிலையில் அவரிடத்தில் சொல் ஏதும் எழாது. பேச்சற்ற மோனநிலை அது.

திருவருட்பயன் > பத்தாம் அதிகாரம் > 10. அணைந்தோர் தன்மை > பாடல்: 91

92 வேறொன்றையும் விரும்பாமை

பதம் பிரித்துஉள்ளபடியே
ஐந்தொழிலும காரணர்களாம் தொழிலும் போகம் நுகர்
வெம் தொழிலும் மேவார் மிக.
ஐந்தொழிலுங் காரணர்க ளாந்தொழிலும் போகநுகர்
வெந்தொழிலும் மேவார் மிக.
பொருள் : படைத்தல் முதலிய ஐந்தொழில்கள் சிவனுக்கு உரியவை. அவனைப் போலத் தாமும் ஐந்தொழில் செய்தல் வேண்டும் என்ற விருப்பம் சிவனை அணைந்தோர்க்குச் சிறிதும் ஏற்படுவதில்லை. காரணக் கடவுளர் என்போர் சிவனது ஆணையைப் பெற்றுப் படைத்தல் முதலிய தொழில்களுக்குத் தலைவராய் நின்று செய்வர். அவர்களின் நிலையைத் தாமும் பெறவேண்டும் என்ற விருப்பமும் சிவனை அணைந்தோர்க்குச் சிறிதும் உண்டாதல் இல்லை. உலக போகங்களை நுகர வேண்டும் என்ற விருப்பமும் அவர்களுக்குச் சிறிதும் நிகழ்வதில்லை.

திருவருட்பயன் > பத்தாம் அதிகாரம் > 10. அணைந்தோர் தன்மை > பாடல்: 92

93 சிவனையன்றி வேறொன்றை அறியார்

பதம் பிரித்துஉள்ளபடியே
எல்லாம் அறியும் அறிவு உறினும் ஈங்கு இவர் ஒன்று
அல்லாது அறியார் அற.
எல்லா மறியு மறிவுறினு மீங்கிவரொன்
றல்லா தறியா ரற.
பொருள் : எல்லாவற்றையும் அறியக்கூடிய சிவனது அறிவாகிய திருவருளைத் தாம் பெற்றாராயினும் அணைந்தோராகிய ஞானிகள் அவ்வறிவைக் கொண்டு சிவனைத் தவிர வேறு பொருள்களைச் சிறிதும் அறிய மாட்டார்.

திருவருட்பயன் > பத்தாம் அதிகாரம் > 10. அணைந்தோர் தன்மை > பாடல்: 93

94 ஆமையும் ஞானியும்

பதம் பிரித்துஉள்ளபடியே
புலன் அடக்கித் தம் முதல் கன் புக்கு உறுவார் போதார்
தலன் அடக்கும் ஆமை தக.
புலனடக்கித் தம்முதற்கட் புக்குறுவார் போதார்
தலனடக்கு மாமை தக.
பொருள் : ஆமை நிலத்தின் மேல் இயங்கும் பொழுது தனக்குத் துன்பந் தருவதொன்று எதிரில் வருவதாக உணர்ந்தால் அப்பொழுதே தனது ஐந்து உறுப்புக்களையும் தனக்குக் காவலாய் உள்ள ஓட்டினுள்ளே அடக்கிக் கொண்டு அசைவற்றுக் கிடக்கும். அதுபோல, அணைந்தோராகிய ஞானிகள் உலக ஆசை தம்மைத் தாக்குவதாக உணர்ந்தால், உலகை நோக்கிச் செல்கின்ற மனத்தை அவ்வாறு செல்லாமல் அடக்கித் தமக்கு முதலாய் உள்ள சிவனது வியாபகத்துள்ளே ஒடுங்கி உலகை நினையாதிருப்பர்.

திருவருட்பயன் > பத்தாம் அதிகாரம் > 10. அணைந்தோர் தன்மை > பாடல்: 94

95 சிவனைப் போல எங்குமாய் நிற்றல்

பதம் பிரித்துஉள்ளபடியே
அவனை அகன்று எங்கு இன்றாம் ஆங்கு அவனாம் எங்கும்
இவனை ஒழிந்து உண்டாதல் இல்.
அவனையகன் றெங்கின்றா மாங்கவனா மெங்கு
மிவனையொழிந் துண்டாத லில்.
பொருள் : எந்த இடமும் சிவனை நீங்கியில்லை. அவ்வாறே, சிவமாம் தன்மை பெற்றுச் சிவனாகவே உள்ள இந்தச் சீவன் முத்தனை நீங்கி எவ்விடமும் இல்லையாம்.

திருவருட்பயன் > பத்தாம் அதிகாரம் > 10. அணைந்தோர் தன்மை > பாடல்: 95

96 உள்ளும் புறமும் சிவமே காணுதல்

பதம் பிரித்துஉள்ளபடியே
உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக் காட்சியருக்கு
எள்ளும் திறம் ஏதும் இல்.
உள்ளும் புறம்பு மொருதன்மைக் காட்சியருக்
கெள்ளுந் திறமேது மில்.
பொருள் : சிவஞானிகள் தம் அகத்தே சிவத்தைக் கண்டு நின்றாற்போலப் புறத்தேயும் எப்பொருளிலும் சிவத்தையே காண்பார்கள். இவ்வாறு அகம் புறம் என்னும் வேறுபாடின்றி ஒரே தன்மையாய்க் காணும் அவர்க்கு இகழ்தற்கு உரியதாக எப்பொருளும் இல்லை.

திருவருட்பயன் > பத்தாம் அதிகாரம் > 10. அணைந்தோர் தன்மை > பாடல்: 96

97 உறுந்தொழிலும், வறுந்தொழிலும்

பதம் பிரித்துஉள்ளபடியே
உறும் தொழிற்குத் தக்க பயன் உலகம் தத்தம்
வறுந்தொழிற்கு வாய்மை பயன்.
உறுந்தொழிற்குத் தக்க பயனுலகந் தத்தம்
வறுந்தொழிற்கு வாய்மை பயன்.
பொருள் : உலகர் எச்செயலையும் பற்றோடு செய்வர். பற்றோடு கூடிய அச்செயலுக்குப் பயன் உலகமாகும். அணைந்தோர் அருள் வழியில் நின்று, எச்செயலையும் பற்றின்றிச் செய்வர். அவர் செயலு<க்குப் பயன்மெய்ப் பொருளாகிய சிவமேயாகும்.

திருவருட்பயன் > பத்தாம் அதிகாரம் > 10. அணைந்தோர் தன்மை > பாடல்: 97

98 வினை நீங்கும் முறைமை

பதம் பிரித்துஉள்ளபடியே
ஏன்ற வினை உடலோடு ஏகும் இடை ஏறும் வினை
தோன்றில் அருளே சுடும்.
ஏன்ற வினையுடலோ டேகுமிடை யேறும்வினை
தோன்றி லருளே சுடும்.
பொருள் : இப்பிறப்பில் நுகர்தற்கு என்று முகந்து கொண்டு வந்த பிராரத்த வினைகள் சீவன் முத்தர்க்கு இவ்வுடம்பு இருக்கும் வரையில் இருந்து, அவரால் பற்றின்றி நுகரப்பட்டு இவ்வுடம்பு நீங்குங் காலத்தில் முடிந்தொழியும். அவர் பிராரத்த வினையை நுகரும்போது புது வினையாகிய ஆகாமியம் தோன்றுமாயின் அதனைத் திருவருளே எரித்துவிடும்.

திருவருட்பயன் > பத்தாம் அதிகாரம் > 10. அணைந்தோர் தன்மை > பாடல்: 98

99 அந்நிலையை இந்நிலையில் அடைதல்

பதம் பிரித்துஉள்ளபடியே
மும்மை தரும் வினைகள் மூளாவாம் மூதறிவார்க்கு
அம்மையும் இம்மையே யாம்.
மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதறிவார்க்
கம்மையு மிம்மையே யாம்.
பொருள் : வினைகள் இம்மை, அம்மை, மறுமை என்னும் மூவகைப் பயனையும் தருவன. அவ்வினைகள் உயர்ந்த ஞானம் உடையவரிடத்தில் மூண்டு வளர்தல் இல்லை. அதனால் அவர்க்கு இவ்வுடம்பு நீங்கிய பின் எய்தும் பேரின்ப நுகர்ச்சியாகிய பரமுத்தி நிலை இவ்வுடம்பு உள்ள இப்பொழுதே உண்டாவதாகும்.

திருவருட்பயன் > பத்தாம் அதிகாரம் > 10. அணைந்தோர் தன்மை > பாடல்: 99

100 உலகின்மேல் கருணை

பதம் பிரித்துஉள்ளபடியே
கள்ளத் தலைவர் துயர் கருதித் தம் கருணை
வெள்ளத்து அலைவர் மிக.
கள்ளத் தலைவர் துயர்கருதித் தங்கருணை
வெள்ளத் தலைவர் மிக.
பொருள் : உலக மாந்தர் இறைவனை மறந்து தம்மையே தலைவராகக் கருதி நான் எனத் தருக்கி வாழ்வர். அத்தருக்கினால் விளைவது வினையாகும். அவ்வினையினால் விளைவது துன்பமே யாகும். இவ்வாறு மாந்தர் தம் அறியாமையினால் படும் துன்பத்தைக் கண்டு ஞானிகள் அவர் மீது இரக்கம் கொள்வர். அவ்இரக்க மிகுதியால், அவர் கேட்பினும் கேளாது போயினும், அவர்க்கு உண்மையினை எடுத்துரைக்க முற்படுவர். கனிவாகவும் சில சமயங்களில் கடுமையாகவும் அறிவுரை கூறுவர். இவ்வாறு சிவனை அணைந்தோர் சிவனைப் போலவே பேரருள் உடையவராய் இருந்து உலகிற்கு உய்யும் நெறி காட்டுவர்.

திருவருட்பயன் > பத்தாம் அதிகாரம் > 10. அணைந்தோர் தன்மை > பாடல்: 100

மொத்த பாடல்கள்: 100

முன்   முகப்பு