சிவவாக்கியம் | SivaVaakkiyam | full |
பாடல் எண் | பாடல் | Verse |
---|---|---|
0 | அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. சிவவாக்கியம் > காப்பு > பாடல்: 0 | |
1 | கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே. சிவவாக்கியம் > காப்பு > பாடல்: 1 | |
2 | ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே. சிவவாக்கியம் > அக்ஷர நிலை > பாடல்: 2 | |
3 | ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. சிவவாக்கியம் > சரியை விலக்கல் > பாடல்: 3 | |
4 | உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே. சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 4 | |
5 | வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால் விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல் சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே. சிவவாக்கியம் > தேகநிலை > பாடல்: 5 | |
6 | என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 6 | |
7 | நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை, நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ? அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 7 | |
8 | மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ; எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ; கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ- நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய். சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 8 | |
9 | அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம் கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம் பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின் துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 9 | |
10 | அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 10 |