கண் அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ! காரா கிரகக் கலி ஆழ்வேனை நின் பேரா இன்பத்து இருத்திய பெரும! வினவல் ஆனாது உடையேன் எனது உளம் நீங்கா நிலை ஊங்கும் உளையால் அறிவின்மை மலம் பிரிவு இன்மை எனின் ஓராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல் திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய் சுத்தன் அமலன் சோதி நாயகன் முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா வேறுநின்று உணர்த்தின் வியாபகம் இன்றாய்ப் வேறும் இன்றாகும் எமக்கு எம் பெரும! இருநிலம் தீநீர் இயமானன் கால் எனும் பெருநிலைத் தாண்டவம் பெருமாற்கு இலாதலின் வேறோ உடனோ விளம்பல் வேண்டும் சீறி அருளல் சிறுமை உடைத்தால் அறியாது கூறினை அபக்குவ பக்குவக் குறிபார்த்து அருளினம் குருமுதலாய் எனின் அபக்குவம் அருளினும் அறியேன் மிகத்தகும் பக்குவம் வேண்டில் பயன் இலை நின்னால் பக்குவம் அதனால் பயன்நீ வரினே நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ தன் ஒப்பார் இலி என்பதும் தகுமே மும்மலம் சடம் அணு மூப்பு இளமையில் நீ நின்மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ உணர்வு எழும் நீக்கத்தை ஓதியது எனினே இணை இலி ஆயினை என்பதை அறியேன் யானே நீக்கினும் தானே நீங்கினும் கோனே வேண்டா கூறல் வேண்டும் காண்பார் யார்கொல் காட்டாக்கால் எனும் மாண்பு உரை உணர்ந்திலை மன்ற பாண்டியன் கேட்பக் கிளக்கும் மெய்ஞ்ஞானத்தின் ஆட்பால் அவர்க்கு அருள் என்பதை அறியே