செய்யுள்கள் அல்லது பாக்கள் ஆனவற்றின் சீர்களுக்கு இடையே உள்ள தளைகளின் தன்மையில் ஓசை உண்டாகிறது. இவ்வோசைகளின் வேறுபாட்டின் அடிப்படையிலேயே பா வகைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு நிற்கின்றன.
பாக்கள் ஐந்து வகை, அவை:
செப்பலோசையை உடைய வெண்பா
அகவலோசையை உடைய ஆசிரியப்பா
துள்ளலோசையை உடைய கலிப்பா
தூங்கலோசையை உடைய வஞ்சிப்பா
வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் மருட்பா
என்பனவாம்.
ஓசைகள் நான்கு வகை, அவை:
வெண்பாவிற்கான ஓசை செப்பலோசை.
செப்பல் என்றால் செப்புதல், உரைத்தல், விடை கூறுதல் எனப்படும். வினாவிற்கு விடை கொடுப்பது போன்ற ஓசை இருப்பதால் செப்பலோசை எனப்படுகிறது.
ஆசிரியப்பாவிற்கான ஓசை அகவலோசை.
அகவல் என்பது அழைத்தல் என்னும் பொருள் உடையது. ஒவ்வோர் அடியும் தனித்தனியே அழைக்கும் வகையில் அமைந்திருப்பதுதான் அகவல் என்பதற்கான காரணம்.
கலிப்பாவிற்கான ஓசை துள்ளலோசை.
அலைகள் தள்ளுவது போல சொற்கள் அமைந்திருப்பதால் துள்ளல் ஓசை வந்திருப்பதாக கூறுவர்.
வஞ்சிப்பாவிற்கான ஓசை தூங்கலோசை.
தூங்கல் என்றால் தொங்கல் என்ற பொருள். நெடுஞ்சீர்களால் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என்பர்.
மருட்பாவிற்கான ஓசை வெண்பாவிற்கும் ஆசிரியப்பாவிற்கும் சேர்ந்த ஓசையாகிறது.
மருள் என்றால் கலத்தல் என்று பொருள். வெண்பாவின் செப்பலோசையும் ஆசிரியப்பாவின் அகவற்பாவும் கலந்து வருவதால் மருட்பா எனப்படுகிறது.