ஓவியர் சில்பி அவர்களின் கருடாழ்வார் ஓவியத்தைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். “இந்த மனுசனால மட்டும் எப்படி இவ்வளவு நேர்த்தியா வெறும் கோடுகளில் உயிர்ப்பைக் கொண்டுவர முடிகிறது. எல்லாம் அவ்வளவு எளிதாய் வந்திடுமா என்ன?! அவரும் பலவாறு பயிற்சி செய்திருப்பார் தானே.” என்ற எண்ண ஓட்டத்துடன், சரி… நாமும் அவரை/அவரது ஓவியங்களின் வழி பயிற்சி செய்து அவரது கால் தூசி அளவிற்காவது தேர்ச்சி பெறலாம் என்று ஒரு உத்வேகம் எப்பொழுதும் போல் எழ, எழுதுகோல், காகிதம் சகிதம் எல்லாம் எடுத்து வரைய உட்கார்ந்தாச்சு.
எங்கிருந்து ஆரம்பிப்பது??…. million dollar question… :))
கருடாழ்வாரின் முகத்தில் துவங்கி, தோள்கள், குவித்த கைகள், மடித்த கால்கள், பின்னணி மாடம், என வடிவங்கள் எழுதித் தோராயமாக முழு வடிவம் கொணர்ந்த பின், சிதைக்காமல் படத்தை நன்றாக முடிக்கலாம் என ஓரளவிற்கு நம்பிக்கை வர, அடுத்த கட்டமாக பேனா கொண்டு எல்லைக் கோடுகள் தீட்டியாச்சு. 2D effectல் படம் தயார்.
அடுத்து 3D effect. இதில் தான் இருக்கிறது பல கோணங்களிலும் போடும் கோடுகள். சரியான இடைவெளிகளில், கீழ் மேலாக, குறுக்கு நெடுக்காக, இடம் வலம் ~ வலம் இடமாக, சில இடங்களில் தடித்தும், பல இடங்களில் மென்மையாகவும் சில்பி அவர்களின் அசலைப் பார்த்த வண்ணம் கோடுகள் போடப் போட ஓரளவிற்கு உயிரோட்டம் நகலிலும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பு மகிழ்ச்சியாகும்.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
17-Jan-2024