39. புகழினும் சிறந்த சிறப்பு! பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். திணை: பாடாண். துறை : இயன்மொழி, சிறப்பு : வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது. புறவின் அல்லல் சொல்லிய, கறையடி யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக் கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக! ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல் ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல் தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று, மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து, அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால் முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு, எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள், கண்ணார் கண்ணிக், கலிமான், வளவ! யாங்கனம் மொழிகோ யானே; ஓங்கிய வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு இமையம் சூட்டியஏம விற்பொறி, மாண்வினை நெடுந்தேர், வானவன் தொலைய வாடா வஞ்சி வாட்டும்நின் பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே?
புறநானூறு > பாடல்: 39
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக