திருமந்திரம்

132. சிவலிங்கம் ( சிவகுரு )

(பாடல்கள் 1773 முதல் 1777 வரை)

பாடல் எண்: 1773

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே. 1

தமிழ் விளக்கம்:

ஒலிக்கினஅற கடலை ஆடையாக உடைய நிலவட்டம், நீர், பல செயல்கட்கும் பயன்பட்டு நிற்கின்ற நெருப்பு, எங்கும் பரந்து செல்கின்ற காற்று, அனைத்தையும் தன்னுள் முறைப்பட அடக்கி நிற்கின்ற வானம் இவை அனைத்துமாய் அவற்றில் நிறைந்து நிற்கும் வகையில் உயர்ந்து சென்று, முடிவில் வானத்தையும் கடந்து உயர்ந்தோனாகிய சிவனை யான் உய்தி பெறுதற்கு, `ஒரு சிறு வடிவினனாகக் கண்டு வலம் வருதல் முதலிய வகையால் வழிபடுதல் எவ்வாறு` என அறிகின்றிலேன்.

English Meaning:

He pervades the roaring waters of the seas
He permeates the spreading winds and flaming fire
Thus is He immanent in all Nature
Yet I know Him not, adore Him not.

பாடல் எண்: 1774

வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே. 2

தமிழ் விளக்கம்:

மேற்கூறியவாறு நீண்டகன்று வரம்பிலனாகிய சிவனை வரம்புட்படுத்து வழிபடும் வழி ஒன்று இந்நிலவுலகில் உண்டு. அஃது யாதெனின், அலைகளை வரிசையாக்கி அதனாலே கரையை அடைகின்ற கங்கையாற்றின் நீரையும், பூக்களையும் கையிலே கொண்டு, அவனது பெயர்கள் பலவற்றையும் சொல்லி ஆட்டியும், சாத்தியும் வழிபட்டு அவனை அங்ஙனம் வழிபடப்பட்ட அவ்வடிவத்தில் வைத்து உணர்தலேயாகும். அங்ஙனம் உணரவல்லார் உளராயின் அவ்வடிவைப் பொள்ளல் செய்து அதனை விட்டு அவன் வேறு எங்கும் போய்விட மாட்டான்.

English Meaning:

There is but one way here
Of knowing Him and adoring Him
They who with water and flower chant His name
They shall know Him;
And from them He of the matted lock
Separates not.

பாடல் எண்: 1775

ஒன்றெனக் கண்டோ ம் ஈசன் ஒருவனை
நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ
வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற
அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே. 3

தமிழ் விளக்கம்:

`சிவபிரான் ஒருவனே ஒப்பற்ற தனிமுதற் பொருள்` என நான் உணர்ந்தேன். அதனால் `அவனை மேற்கூறியவாற்றால் `வழிபடுதல் ஒன்றே நன்னெறி` என உணர்ந்து வழிபடுந்தோறும் வழி படுந்தோறும் அவன் தனது பேரின்ப வெள்ளம் எனது ஐம்புலன்களில் அடங்காததாய் மிக்கெழுந்து என்பால் விளையப் பண்ணுதலை அப்பொழுது அப்பொழுதே செய்கின்றான்.

English Meaning:

As the One and Only Being
I saw the Lord,
And full well I adored His Holy Feet,
Subduing my senses five;
And He His blessings granted,
The gracious One, the Lord Primal.

பாடல் எண்: 1776

மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே. 4

தமிழ் விளக்கம்:

சிவன் தனது தடத்த நிலையில் `அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், சத்தி, சிவன், விந்து, நாதம் - என்னும் ஒன்பது நிலைகளில் நின்று உயிர்கட்கு அவன் நிலைகேற்ற பயனைத் தருவன் ஆகலின் அவை அனைத்துக்கும் பொதுக் குறி யாவது இலிங்கத் திருமேனியே. அதனால் அதனைப் பராசத்தியோடே நிற்கும் பரசிவனாகிய சொரூப சிவனது குறியாகவும் உணர்ந்து வழிபடல் வேண்டும்.

English Meaning:

Brahma, Vishnu, Rudra, Mahesa
The five-faced Sadasiva, Bindu and Nada
Sakti and Siva--
All these as Linga His blessings grants,
He is but Nandi that is Para Supreme.

பாடல் எண்: 1777

மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
ஆவி எழும்அள வன்றே உடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கிற் பரகதி தானே. 5

தமிழ் விளக்கம்:

உயிரை உடம்பில் நிறுத்திச் செயற்பட்ச் செய்ய எழுந்த விருப்பத்தால் கீழ்நோக்கிக் கிடந்தும் மேல் நோக்கி எழுந்தும் விளங்குகின்ற குண்டலினி சத்தியோடு உயிர் பொருந்தி செயற்படும் வரையிலுமே உடல் நிலைபெற்றிருக்கும். அச்செயற்பாடு நின்றவுடன் உடல் நீங்கிவிடும். ஆகவே, உடல் உள்ளவரையும் உள்ளே விரும்பி ஈர்க்கப்படுவதும், வெளியே விடப்படுவதால் நீங்கிச் செல்வதும் ஆகிய மூச்சுக் காற்றினை அவ்வாற்றின் அடக்கி நடுநாடி வழியே செலுத்துமாற்றால் இதுகாறும் கூறிவந்த அண்ட லிங்கம் முதலிய அனைத்து இலிங்கங்களிலும் சிவனைப் பாவனை செய்து வழிபட்டால் மேலான கதி கிடைப்பதாகும்.

English Meaning:

Rouse with the flaming Kundalini
And upward your Prana course;
Halting within the body
The acts of inhalation and exhalation
This, if you, through practice accomplish
You indeed have reached
The Supreme State Divine.

← அட்டவணைக்குச் செல்ல