திருமந்திரம்

134. திருவருள் வைப்பு

(பாடல்கள் 1792 முதல் 1813 வரை)

பாடல் எண்: 1792

இருபத மாவது இரவும் பகலும்
உருவது ஆவது உயிரும் உடலும்
அருளது ஆவது அறமும் தவமும்
பொருவது உள்நின்ற போகமது ஆமே. 1

தமிழ் விளக்கம்:

`நாள்` என்பது, `இரவு, பகல்` என்னும் இரு நிலைகளை உடையது. `பிறப்பு` என்பது, `உயிர், உடல்` என்னும் இரண்டின் கூட்டம். அவைபோலச் சிவனது திருவருட்பேறாவது, துறவும், நோன்பும் ஆகிய இரண்டின் நிகழ்ச்சியாகும். இனி அந் நிகழ்ச்சிக்குப் பயனாவது உயிர்க்குயிராய் உள்ள அந்த இன்பத்தை அறிந்து நுகர்தலேயாம்.

English Meaning:

Darkness (ignorance) and Light (knowledge)
Are the states two;
Life and body are the forms two;
Dharma and penance are the graces two;
Truth is but the blessing within.

பாடல் எண்: 1793

காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே. 2

தமிழ் விளக்கம்:

(சிவனை உயிர்கள் அனாதியில் ஒராற்றானும் உணர்தல் இல்லை.) பின்பு உலகியல் உணர்வானே ஏனைப் பொருள்களைக் காண்டல், கருதல், தீண்டல், பற்றுதல் இவற்றைச் செய்தல் செய்து பெறுதல் போல அவனை அவ்வுயிர் பெற முயன்றால், அவனும் அவ்வகையினால் எல்லாம் அவற்றால் எய்துதற்கு அறி யனாய், அவற்றிற்கு மிகத் தொலைவில் உள்ளவனாகியே நிற்பான். பின்பு ஒரு காலத்தில் அவனே விருப்பத்தை உடையவனாகிப் புறத்தே விளங்கும் இல்லக விளக்குப்போலும் 3 தன்மையுடன் அகத்தில் தானே நல்லக விளக்காய் நீங்காது நிற்றலால், அவ்விடத்துள்ள அறியாமையாகிய இருள் அற்றொழியா நின்றது.

English Meaning:

Elusive is He for us to see;
Beyond our Thoughts is He, the Nandi,
Distant is He to touch and feel,
Pray long in the light of your heart,
The darkness that envelops you dispelled stands.

பாடல் எண்: 1794

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையைக் சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே. 3

தமிழ் விளக்கம்:

முன் மந்திரத்திற் கூறியவாறு நிற்கும் நல்லக விளக்கை நோக்கும் நோக்கத்தால் முதற்கண் `யான்` என்றும், `எனது` என்றும் உயிர்மயங்குமாறு அதனோடு ஒற்றுமைப் பட்டு நின்ற உலகம், உண்மையில் அன்னவாகாது அதனின் வேறாய் அதன் அறிவினுள்ளே தோன்றும் அதன்பின் எல்லாவற்றிற்கும் தன்னையும், பிறரையுமே முதல்வராகக் கருதும் சீவபோதத்திற்குக் காரணமான மல இருள் நீங்க, `எல்லாம் அவனே` என்னும் சிவபோதம் நிலைத்து நிற்கும். அச்சிவபோதத்தின் வழிச் சிவனையே நாடுதல் ஒழிந்து மீட்டும் தனது அறிவாற்றலைப் பற்றாக நாடின், பெத்தான்மாக்களை அவர்களது அறிவிச்சை செயல்களைச் செயற்படுத்தி ஆள்கின்ற காரணக் கடவுளராம் நிலை எய்துவதாகும்.

English Meaning:

In the hint of His grace,
All universe shall be revealed to you;
When the darkness of ignorance lifts,
The Great one stands revealed;
When you seek Him,
Your swarming thoughts on Him centered,
You shall see the light of Jnana,
And thus immortal become.

பாடல் எண்: 1795

தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை
ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே. 4

தமிழ் விளக்கம்:

எங்கள் இறைவனாகிய சிவன் எம்மை விட்டு ஒரு போதும் நீங்கியதில்லை. அதனை அனுபவமாக உணர்ந்த அனுபூதி மான்களது அறிவுரையை `இதுவே மநக்குத்துணையாவது` என்று பற்றி உணரவல்லவன் எவனோ அவனே பொரும்பொருள் தன்மையைத் தான் பெற வல்லவனாவன். அதனை முன்பே உணர்ந்து ஒழுகாமையால் பல காலங்கள் வீணாகவே கழிந்தன.

English Meaning:

In ignorance my time rolled on;
Yet my Lord will in time know me;
By their light of Knowledge and love intense
He will know them,
He the Bounteous One.

பாடல் எண்: 1796

தானே அறியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்
ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்
தேனே யனையன் நம் தேவர் பிரானே. 5

தமிழ் விளக்கம்:

முன் மந்திரத்திற் கூறியபடி ஆர்ந்தறிந்தார் அறிவை துணையாகச் சார்ந்தறிந்தமையால் உள்ளமேயன்றி உடம்பும் உருகுமாறு ஞானமே வடிவாய் நிற்கும். சிவமுதற்பொருளை உணர்ந்த பின் அம் முதல்வன் தேன்போல இனியனாய்த் தெவிட்டாது நின்றான். இந் நிலையில் சஞ்சித வினைகள் கெட்டொழிதலன்றி அவற்றிற்கு வேறு வழியில்லை. அங்ஙனம் அவை கெட்ட பின்பு யான் அவற்றை நுகர் வோனாதலும், சிவன் அவற்றை எனக்குக் கூட்டி நுகர்விப்போ னாதலும் ஆகிய நிலைமைகள் எங்ஙனம் உளவாகும்! உளவதால் இல்லை.

English Meaning:

Himself will know me,
When my Karmas perish;
I know not when; but Nandi will;
Do melt in piety
And reach divine Consciousness;
Sweet unto honey is our Lord of Immortals.

பாடல் எண்: 1797

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான்அறிந் தார் அறி யாது மயங்கினர்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே? 6

தமிழ் விளக்கம்:

என்னுள் இருக்கின்ற இறைவனை அறிய வேண்டி யவன் யானே யன்றோ! (அந்நிலை இன்று யான் கைவரப் பெற்றேன்.) வானுலகம் ஒன்றையே அறிந்து நிற்கும் வானவர் அந்த அறிவால் தம்முள் இருக்கும் இறைவனை அறியாது மயங்குவாராயினர். ஒவ்வொருவனும் தனது உடம்பின் இயல்பையும், அந்த உடம்பினுள் உள்ள உயிரையும், அந்த உயிருக்குள் உயிராய் நின்று அதற்கு அறிவைத் தருகின்ற உள்ளொளியாகிய இறைவனையும் அறிந்து அவ்வாற்றால் பயன்பெற வேண்டியவன் அவனேயாய் இருக்க அவனவனும் அதனைச் செய்யாது கிடப்பானாயின் அவனுக்காக மேற்கூறியவைகளை யார் அறிவார்!

English Meaning:

I have known the Lord from days bygone
But the Celestials knew Him not,
Doubt-tossed were they;
The Lord is the Light
In my fleshly body as Prana pulsates
If I know Him not, who else will?

பாடல் எண்: 1798

அருள்எங்கு மான அளவை அறியார்
அருளை நுகர்அமு தானதும் தேரார்
அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார்
அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே. 7

தமிழ் விளக்கம்:

திருவருளின் பெருவியாபகம், அஃது அதனைப் பெற்றார்க்குப் பேரின்பம் விளைத்தல், காரணக் கடவுளது தொழில்கள் எல்லாவற்றிற்கும் அதுவே முதலாதல், அனைத்தையும் அது முற்றுற அறிதல் ஆகியவற்றை எல்லாம் அதனைப் பெற்றோர் அறிதலன்றிப் பெறாதார் சிறிதும் அறியமாட்டார்.

English Meaning:

They know not the measure of Grace
That is pervasive all;
They know not the ambrosial sweetness
That from Grace flows;
They think not of the Five Acts
That Grace subtle performs;
Who knows how all-pervasive is Grace, indeed!

பாடல் எண்: 1799

அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு
அறிவது ஆக்கி அடியருள் நல்கும்
செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே. 8

தமிழ் விளக்கம்:

உயிர் அறிவுடையதாயினும் அவ்வறிவு ஆணவத்தால் தடுக்கப்பட்டமையின் அத்தடையை நீக்கி அஃது அறிவை அடையும்படி தொடுத்துப் பின்பு அவ்வறிவு பொறிகளின் வழிச் சென்று புலன்களை விரும்பிப் பாச அறிவாகும்படி செய்து, அவ்விடத்து அவ்வறிவு தான் விரும்பும் புலன்களை நுகர்தற்கு உடனாய் நின்று, பின்பு பாச அறிவாய் நின்ற அதனைப் பதியறிவாகச் செய்து, அவ்வாற்றால் பதிநிலையை எய்திய அடியார் குழாத்துள் இருக்க அருளுவதாகிய திருவருளை எய்தி அதுவே பற்றாக நின்றவரே சிவமாம் தன்மைப் பெருவாழ்வை எய்தினார்.

English Meaning:

To seek the Divine Light
He grants the light of knowledge;
He infuses the organs of sense
With desire
And leads you to enlightenment;
He then seats you
In the midst of the devout and holy;
They who His Grace thus received,
Verily became Siva themselves.

பாடல் எண்: 1800

அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே. 9

தமிழ் விளக்கம்:

யான் எம்பெருமானது திருவருளாற்றான் பிறந்தேன்; வளர்ந்தேன்; இறந்தேன். உலகம் ஒடுங்கிக் கிடந்த பொழுது யான் ஓய்வாக இருந்தேன்; மீட்டும் உலகம் தோன்றிய பொழுதும் பிறந்து வாழவே விரும்பினேன். இவ்வாறு முடிவின்றிச் சுழன்று வந்த யான் அவனது அருளே வடிவாகி நின்ற அந்த இறுதிக்காலத்தில் அப்பெருமான் எனக்கு எல்லையில் இன்பத்தை வழங்கி என் உள்ளத்தில் நீங்காது நின்றான் எல்லாம் அவனது அருளாலேதான் நிகழ்ந்தன.

English Meaning:

In His Grace was I born,
In His Grace I grew up;
In His Grace I rested in death;
In His Grace I was in obfuscation;
In His Grace I tasted of ambrosial bliss;
In His Grace, Nandi, my heart entered.

பாடல் எண்: 1801

அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுணைந்து ஆர்வமும் தந்திட்டு
அருளானஆனந்தந்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அதும்புகுந் தானே. 10

தமிழ் விளக்கம்:

Not available

English Meaning:

By His Grace was I bathed in the ocean of nectar;
By His Grace He rested His Feet on me
By His grace He granted the fervour of devotion
By His Grace He fed me the bliss that is ambrosial
By His Grace, Nandi my heart entered.

பாடல் எண்: 1802

பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின்
நேசத்தை விட்டது அருள்அந்தநேசத்தில்
கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே. 11

தமிழ் விளக்கம்:

என்னை எனது இயற்கைப் பாசம் தனது சத்தி கெடுதற்பொருட்டுச் செயற்கைப் பாகத்தில் இட்டுத் துன்புறுத்தியதும் திருவருளே (இது திரோதனகரியாய் நின்ற நிலை) இயற்பாசம் சத்தி கெட்ட பின்னர் யான் அச்செயற் கைப்பாசங்களையே மேலும், மேலும் விரும்பிய விருப்பத்தை விடச்செய்ததும் திருவருளே. பாசத் தொடர்பினால் மெய்ப்பொருளை அணுகக் கூசிய கூச்சம் நீங்கி அம் மெய்ப்பொருளை அடைந்து, அதனானே துன்பக் கடலினின்றும் கரை யேற்றுவித்ததும் திருவருளே, துன்பக் கடலினின்றும் கரையேறிய பொழுது விளைந்த எல்லையில்லாத இன்பத்தில் அவ்வின்பம் ஒன்றுமே தோன்றத்தான் தோன்றாது மறைந்ததும் திருவருளே.

English Meaning:

It was His grace that led me into Pasa
It was His Grace that freed me from that Pasa
It was His grace that in divine love granted Mukti
It was His Grace that granted me the love
For the State beyond Mukti.

பாடல் எண்: 1803

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன்
உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே. 12

தமிழ் விளக்கம்:

சிவபெருமான் எனக்கு இனிப் பிறவா நெறியை அளித்த பெருங்கருணையை உடையவன். அதன்பின்னும் தன்னை யான் மறவாதிருக்கும்படியும் அருள்புரிந்தான். தவக்கோலத்தைப் பூண்டவன். அறக்கடலாய் அழகிய தட்பத்தையும் உடையவன். தனக்கொரு முதல் இன்றித்தானே எல்லாவற்றிற்கும் முதலானவன். எல்லாவற்றிற்கும் மேலொடு கீழாய் விரிந்தவன் l அத்தகையோன் தானே எனது உள்ளத்தைத் தகவு செய்து அதனுட் புகுந்தான்.

English Meaning:

Of infinite Grace is the Lord
Who my birth\'s bonds sundered;
Of the holiest of holy is Nandi
He is the Dharmic sea;
The Pure One;
The Primal Lord
In amity my heart entered.

பாடல் எண்: 1804

அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே
அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு
அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய்
அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே. 13

தமிழ் விளக்கம்:

சிவன் உயிர்களது அறிவினுள்ளே அருளை நிறைவித்து, அதனால் இன்பத்தைப் பெருக்கி விளக்கமுற்று நின்றால் இன்பப் பொருளாய் அனுபவப்படுவான். அதனால் அடியேனுக்கு அவன் அங்ஙனம் அருளை வழங்கினமையால் கருவிகளின் வழியாக அன்றி, நேரே தலைப்பட்டுணரும் பொருளாயினான். ஆகவே, அருள் வழங்கப் பெறாதாரது அறிவினுள்ளும் இருப்பினும் அவர்கட்கு அவன் அங்ஙனம் உணரும் பொருளாதல் இல்லை.

English Meaning:

In my heart He entered, grace abounding;
Even if He is in there,
Those devoid of Grace know Him not;
Entering the heart,
He filled me with bliss;
As Sivam, he made me
As Nandi my heart entered,
And I blissful became.

பாடல் எண்: 1805

ஆயும் அறிவோடு அறியாத மாமாயை
ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்
ஆய பலஇந் திரியம் அவற்றுடன்
ஆய அருள்ஐந்து மாம் அருட் செய்கையே. 14

தமிழ் விளக்கம்:

`பெத்த நிலையில் உள்ள உயிர்களிடத்தும் திரு வருள் உளதாயினும் அது நேர்நிலை யன்று` என மேற்கூறிய இயை பானே, அஃது அத்திருகல் நிலையில் நின்று செய்வனவற்றை இங்கு நின்றும் விரிக்கின்றார். மாயா காரியங்களைக் கருவியாகக் கொண்டு ஆராய்ந்து அறிந்து வரும் அறிவும், அக்கருவிகளும், அக்கருவிகளின் வழிப் புலன்களை ஆன்ம அறிவை அடையச் செய்கின்ற ஐந்து பூதங்களும் அப்புலன்களை நேராகவும், பிறவற்றின் வழியாகவும் கவர்கின்ற புற, அகப் பொறிகளும் ஆகிய அனைத்தும் திருவருளின் செயலால் ஆவனவேயாம்.

English Meaning:

He gave me the intelligence that reasons
He gave me the senses that Maya inscrutable fashions
He gave the five elements
And the diverse sense organs
And the Five Acts of Grace

பாடல் எண்: 1806

அருளே சகலமும் ஆய பவுதிகம்
அருளே சராசர மாய அமலமே
இருளே வெளியே யெனும்எங்கும் ஈசன்
அருளே சகளத்தின் அன்றிஇன் றாமே. 15

தமிழ் விளக்கம்:

ஆன்மாக்கள் சகல நிலையை எய்துதற்குக் காரண மான பூதகாரியமாகிய சடப்பொருள்களும், சரமும் அசரமுமாய் உள்ள உயிர் வகைகளும் ஆகிய எல்லாம் திருவருளாலே ஆவனதாம். சிவனும் உயிர்களின் பொருட்டுத் திருமேனி கொள்ளுங்கால் திருவருளால் தான் அவற்றை உடையவன் ஆவான். இன்னும் அவன் ஆன்மாக்களுக்கு மயக்க உணர்வை உண்டாக்குதலும், பின்பு அதனை நீக்கி மெய்யுணர்வைத் தருதலும் திருவருளாலேதான். ஆகவே, திருவருள் இல்லையேல் ஒன்றும் இல்லையாம்.

English Meaning:

All manifestations of Nature are His Grace
All animate and inanimate are His Pure Grace
As darkness, as light, the Lord\'s Grace pervades,
All, all are but the Grace of His Form manifest.

பாடல் எண்: 1807

சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா
நவம்அவை யாகி நடிப்பவன் தானே. 16

தமிழ் விளக்கம்:

சிவம் முதலாக உள்ள நவந்தரு பேதங்களாய் நிற்கும் சிவன் அங்ஙனம் நிற்றலும் திருவருளாலேதான்.

English Meaning:

Siva, Sakti, the luminous Nada and Bindu
The five-faced Sadasiva holy,
Mahesa, Rudra, Mal and the lotus-seated Brahma
--All these forms nine
He assumes.

பாடல் எண்: 1808

அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றா
அருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனே
இருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றாத்
தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே. 17

தமிழ் விளக்கம்:

திருவருளாகிய கண் வாய்க்கப்பெறாதார்க்கு சிவமாகிய நுண்பொருளின் இருப்புத் தோன்றாது. உலகமாகிய பருப் பொருள்களின் விசித்திரங்களே தோன்றும். திருவருளாகிய கண் வாய்க்கப் பெற்றோர்க்கு, சிவனது இருப்பு மட்டுமன்றி அவனேயும் புலப்பட்டுத் தோன்றுவான். இவை எவைபோலும் எனின், ஒளி யில்லாத கண்ணை உடையவர்க்குப் பகலவனது ஒளிதானும் தோன்றாது இருள் மட்டுமே தோன்றுதலும், ஒளியுடைய கண் ணுடையார்க்கு அவனது ஒளிப்பரப்பேயன்றி அவனேயும் தோன்றுதல் போல்வனவாம்.

English Meaning:

They whose eyes are blind
See not the sun even;
They that have vision divine
See the light everywhere;
They who have not the vision of Grace
See not the Lord that is Truth Subtle;
They that have the vision of Grace
See Hara face to face.

பாடல் எண்: 1809

தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைத்திடும்
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
தானே வியாபித் தலைவனும் ஆமே. 18

தமிழ் விளக்கம்:

சிவபெருமானே எங்கணும் வியாபகனாய், ஐந் தொழிலையும் செய்யும் முதல்வனாயினும் அவன் அவன் அத்தன்மையனாய் நிற்றற்குக் காரணமாயிருப்பது அருளாயும், எல்லையின்றி விரிவதாயும், அனைத்தும் வல்லதாயும் அவனிடத்து உள்ள ஆற்றலேயாம்.

English Meaning:

Himself creates; Himself preserves
Himself destroys; Himself obscures
Himself, all these He does
And grants Mukti after;
Himself the all-immanent Lord.

பாடல் எண்: 1810

தலையான நான்கும் தனதுஅரு வாகும்
அலையா அருவுரு வாகும் சதாசிவம்
நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும்
துலையா இறைமுற்று மாய் அல்லது ஒன்றே. 19

தமிழ் விளக்கம்:

(மேல், `ஞான லிங்க` அதிகாரத்தில் ``நாலன கீழ`` என்னும் மந்திரத்தில் சிவன்மேல் வைத்துக் கூறிய மூவகைத் தடத்தத் திருமேனிகளையும், அவற்றைக் கடந்த சொரூப நிலையையும் இம்மந்திரத்தில் திருவருளாகிய சத்திமேல் வைத்துக் கூறினார் என்க.)

English Meaning:

The first four (Siva, Sakti, Nada, Bindu) are His Form-less ones;
The un-moving Form-Formless is the Sadasiva;
The abiding last four (Brahma, Vishnu, Rudra, Mahesa)
Are the Formed ones;
All these and the One beyond too are He.

பாடல் எண்: 1811

ஒன்றது வாலே உலப்பிலி தானாகி
நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை
துன்றி அவைஅல்ல வாகும் துணையென்ன
நின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே. 20

தமிழ் விளக்கம்:

எனது உள்ளத்தில் என் அன்பேயாய் நிற்கின்ற சிவம் தன்போல்வது பிறிதுபொருள் இல்லாது தனி ஓர் அறிவுப் பொருளாய் இருத்தலால் அழிவற்று, என்றும் உள்ளதாகின்றது. அஃது அங்ஙனம் ஒன்றேயாயினும் தன்னைப்போல் அறிவுடையனவாயும், அழிவில்லன வாயும் உள்ள எண்ணற்ற உயிர்க்கும் உள்ளுயிராய் நிற்றலால் பலவாகவும் ஆகின்றது, அங்ஙனம் ஆயினும் அவ்வுயிரின் தன்மயைத் தான் அடையாமல் தான் வேறு பொருளாகவே உள்ளது. இனி, ``அதன் விளையாட்டு`` எனப்படுவது, அஃது உயிர்களோடு பெத்தம், முத்தி இருநிலையிலும் உடனாய் நின்று, எஞ்ஞான்றும் அவற்றிற்கு அவ்வப்பொழுது ஆவனவற்றைச் செய்து உதுவுவதே யாகும்.

English Meaning:

One Being is He, immanent in all life
Indestructible He is;
In them He is; but He is not they;
He indwells them as Friend Divine
This His play, He of my heart\'s desire.

பாடல் எண்: 1812

நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு
ஆயக் குடிலைகள் நாதம் அடைந்திட்டுப்
போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து வாக விளையுமே. 21

தமிழ் விளக்கம்:

முழுதும் திருவருளிலே பொருந்தி நிற்கின்ற சுத்த சிவன் அந்தத் திருவருள் காரணமாகச் சத்தியோடு கூடிச் சத்தனாய் நின்று, பின்பு சுத்தமாயையுள் பொருந்தி முதற்கண் நாத தத்துவத்தைத் தோற்றுவித்து, அத்தத்துவம் பற்றுக்கோடாக சூக்குமை முதலிய நால்வகை வாக்குக்களையும், அந்த வாக்கு முதலிய அனைத்தையும் தம்முள் அடக்கி நிற்கும் சாந்தியதீதை முதலிய ஐந்து கலைகளையும் தோற்றுவித்துப் பின்பு விந்து தத்துவத்தைத் தோற்றுவித்த பின்னரே உலகம் முழுதும் முறைப்படி தோன்றும்.

English Meaning:

Pure Maya Sakti
The Immaculate One who in my heart dwells
The Kudilai (Pure Maya) Sakti He activates;
And from that act is Nadam born;
That emanating Kala rays diverse
As seed the imperishable Bindu produces.

பாடல் எண்: 1813

விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனிமாயை மிக்கமா மாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே. 22

தமிழ் விளக்கம்:

எல்லாக் காரியங்களின் தோற்றத்திற்கும் முதலாய் நிற்கின்ற பரவிந்துவே, பிற எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கி வியாபகமாய் நிற்கும். அது மல கன்மங்களோடு விரவுதல் இன்றித் தூயதாயும் உள்ளது. அதனால் அது `மகாமாயை` எனவும் படுகின்றது. அஃது அபர முத்தர்களாகிய மந்திர மகேசுரர், அணுசதா சிவர் முதலியோருடைய தனு கரணங்களாகவும், சத்த கோடி மகா மந்திரங்களாகவும், வேத சிவாகமங்களாகவும் மேற்கூறியோருடன் மற்றும் விஞ்ஞான கலர்களும் வாழும் அளவற்ற அண்டங்களாயும் விளைந்து பயன்படும்.

English Meaning:

The Bindu that thus arose pervades everywhere;
From it rises the Maya per se and the Mahamaya
And from them emanate the immortals and their clans
The Mantras and the Vedas too,
And the countless countless worlds swarming in the spread.

← அட்டவணைக்குச் செல்ல