திருமந்திரம்

173. அண்டாதி பேதம்

(பாடல்கள் 2297 முதல் 2298 வரை)

பாடல் எண்: 2297

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும் அண் டாசனத் தேவர் பிரானே. 1

தமிழ் விளக்கம்:

அண்டங்களை ஆசனமாகக் கொண்டு, அவற்றிற்கு மேலே விளங்குகின்ற சிவபெருமான், உயிர்களால் பற்றப்பட்டுப் புறமும், அகமுமாய்ப் பல்வேறு வகையில் அமைந்துள்ள அண்டங்கள் எண்ணிலவாய் நிற்க, அவை அனைத்திலும், கட்பொறிக்குப் புலனாகின்ற மாற்றொளியையுடைய, பொன்னால் ஆகிய அணிகலன்போல அவற்றினுள் நிறைந்திருக்கின்றான்.

English Meaning:

In the vast spaces of Cosmos
Are universes numberless
That evolved and separated;
Countless are they
Unto the sands that are
On the shores of seven seas;
Sparkling as a jewel of gold
That dazzles
They form His Seat of Throne
--for Him, the Lord of Celestials.

பாடல் எண்: 2298

ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல்
மேனிஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்க்
தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை
ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே.

தமிழ் விளக்கம்:

அண்டங்களாகிய ஆசனத்தின்மேல் ஆனந்தமாய் உள்ள மெய்ப்பொருள்தான் (வடிவமற்றதாயினும்) அருவம் இரண்டு, அருவுருவம் ஒன்று, உருவம் இரண்டு ஆகிய ஐந்துவடிவங்களைக் கொண்டு விளங்குதலால், அதனால் வியாபிக்கப்பட்ட முப்பத்தாறு முதனிலைப் பொருள்கள் தோன்றி, அழிவின்றி நிற்பனவே `தத்து வங்கள்` எனப்படுகின்றன. அவையே குறைவில்லாத அண்டங் களாய்க் காரியப்பட்டு, அளவிறந்து நிற்கின்றன.

English Meaning:

On that Seat of Throne
He sits as Bliss-Principle (Tattva)
Five, His Forms
Thirty-six the Tattvas He pervades;
Nay,
The Tattvas He pervades
Are eight times by far as numerous
As universes in spaces Vast,
Himself beyond Tattvas\' end.

← அட்டவணைக்குச் செல்ல