திருமந்திரம்

190. காரிய காரண உபாதி

(பாடல்கள் 2501 முதல் 2505 வரை)

பாடல் எண்: 2501

செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
பற்றும் பரோபதி ஏழும் பகருரை
உற்றிடும் காரிய காரணத் தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே. 1

தமிழ் விளக்கம்:

முன்அதிகாரத் தொடக்கத்தில்l `காரிய தத்துவம்` எனக் கூறப்பட்டனவே இங்கு, சீவஉபாதி` என்றும், `காரண தத்துவம்` எனக் கூறப்பட்டனவே இங்கு, `பரோபாதி` என்றும் கூறப்பட்டன. இங்கு, `பரம்` என்பது, பரம் பொருளைக் குறியாமல், `சீவ உபாதிக்கு மேலே உள்ளவை` எனப் பொருள் தந்தது. `இவ்விருவகை உபாதிகளும் நீங்கினால் காரியம் காரணத்தோடு அற்றுவிட்டதாகும். அங்ஙனம் அவை அற்று விட்டதால், `அணு` எனப்பட்ட உயிர் அவ்வணுத்தன்மை நீங்கி, வியாபகப் பொருளாகிய சிவத்தை அடைந்து தனது வியாபக நிலையைப் பெற்று இன்புறும்` என்பது பின்னிரண்டடிகளின் பொருள்.

English Meaning:

When Caused Experiences Seven of Jiva
And Causal Experiences Seven of Para
Leave,
Cause and Caused Difference vanish,
Then Jiva becomes Siva for sure.

பாடல் எண்: 2502

ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நனவு மிகுந்த கனாநனா
ஆறாறு அகன்ற கழுத்தி அதில் எய்தாப்
பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே. 2

தமிழ் விளக்கம்:

தத்துவங்களுக்குள்ளே சில காரியமும், சில காரணமும் ஆதல் பற்றி அவற்றை, `காரியம், காரணம்` எனப் பிரித்துக் கூறினாலும் தத்துவங்கள் அனைத்திற்கும் மாயையே காரணமாகத் தத்துவங்கள் அவற்றின் காரியம் ஆதல் பற்றி அவை அனைத்தையும் இங்கு ``காரியோபாதி`` என்றார். ``நனவு`` என்றது சகல சாக்கிரத்தை. அதன்கண் நிகழும் `நனவு, கனவு, உறக்கம்` என்பவற்றில், இவற்றிற்கு முன் நிலைகளில் எல்லாம் கிடைக்கப்பெறாத பேறு கிடைக்கப் பெறுகின்ற துரிய நிலையை அடைந்த பொழுதுதான் உயிர் உண்மையில் `துவம்` பதப் பொருளாகும்.

English Meaning:

Without Caused Experiences six times six leaving,
Without Jagrat, Svapna and other states of Turiya Jagrat Waking leaving,
Without entering that Sushupti State
That is beyond Tattvas six times six,
What avails it
If of Thom Pada Jiva speaks?
He on earth will never, never,
The Final Goal reach.

பாடல் எண்: 2503

அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்
சிகாரம் சிவமே வகாரம் பரமே
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே. 3

தமிழ் விளக்கம்:

English Meaning:

Letter A is Jiva; U is Para; M is Siva;
In the three States of Mukti;
Si is Siva, Va is Para; Ya is Jiva
Thus the Mantras 'Aum' and 'Sivaya' are as one interpreted.

பாடல் எண்: 2504

உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று
அயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே. 4

தமிழ் விளக்கம்:

எல்லா உயிர்களிலும் அவற்றிற்கு உயிராய், ஒரு ஞான்றும் விட்டு நீங்காது, அழிவின்றியிருப்பினும் உயிர்கள் முன் மந்திரத்தில் கூறிய உபாதிகள் அனைத்தினின்றும் நீங்கிய பின்பே முன்பு பாலில் நெய்போல விளங்காதிருந்த நிலையினின்றும் நீங்கித் தயிரில் நெய்போல வெளிப்பட்டு விளங்குகின்ற சிவன் அவ்வாறு வெளிப்பட்டாலன்றி யாதோர் உயிர்க்கும் துன்பத்தைத் தருகின்ற ஆணவ மலம் நீங்குதல் உண்டாகாது.

English Meaning:

As Life of life,
Interminable and imperishable
Beyond travails of Causal Experiences
And Caused Experience opposite,
Is Isa (Siva) vibrant;
Without His Grace abounding,
Anava that makes Jiva tremble
Never, never, leaves.

பாடல் எண்: 2505

காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பதப்
பாரறும் பாழில் பராபரத் தானே. 5

தமிழ் விளக்கம்:

`காரிய உபாதி` எனமேற் கூறப்பட்ட உபாதிகள் உள்ள பொழுது, உயிர் தன்னையே அறியாது மயங்கும். காரிய உபாதிகள் நீங்கக் காரண உபாதிகள் நீங்காதிருக்குமாயின் உயிர் தன்னை ஒருவாறு அறியினும் தலைவனை அறியாது மயங்கும். இக்காரிய காரண உபாதிகள் உயிர்கட்கு ஆக்கி வைக்கப்பட்டவை. இன்னும் இவ்வுபாதிகள் பலவாகச் சொல்லப்படுகின்ற பதங்களாகிய உலகங்களைச் சார்ந்து நிற்பனவாம். இவையெல்லாம் அற்ற நிலையே `வெறும் பாழ்` எனப்படுகின்றது. அவ்விடத்தில் தான் மேலானவற்றிற்கெல்லாம் மேலான பரம் பொருள் உள்ளது.

English Meaning:

Immanent is Jiva in Caused Experiences Seven,
Immanent is Parasiva in Causal Experiences Seven;
In the Void that defies Cause-Caused description,
Beyond Thought and Word,
Is Paraparan.

← அட்டவணைக்குச் செல்ல