திருமந்திரம்

38. சக்கரப்பேறு

(பாடல்கள் 367 முதல் 370 வரை)

பாடல் எண்: 367

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதகங் கையினோ டந்தரச் சக்கர
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
பார்ப்போக மேழும் படைத்துடை யானே

தமிழ் விளக்கம்:

`திருமால் அறத்தை அறிவுறுத்தும் ஆசிரியன்` என்னும் சிறப்பு நிலைபெறுதற் பொருட்டு, இவ்வுலகில் கீழோர் தம் அகங்காரத்தை வெளிப்படச் செய்யும்பொழுது, அவனது கையோடே சக்கரப் படையும் அகங்கரித்தவர் மேற்சென்று அழித்து நிலை நிறுத்தும்படி, திருக்கயிலையில் வீற்றிருக்கின்ற தேவர் தலைவனாகிய சிவபெருமான் ஏழுலகத்து இன்பத்தையும் படைத்துள்ளான்.

English Meaning:

Filled with arrogance as Guru Supreme
Mal vaunted his egoism about;
Then away flew his heavenly discus,
Atop the Silver Mountains
Of the Lord of Celestial Beings
That created the seven worlds of delight.

பாடல் எண்: 368

சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்
சக்கரந் தன்னைத் ..தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே

தமிழ் விளக்கம்:

சக்கரத்தைப்பெற்ற திருமால் பின்பு அதனைத் தாங்கும் ஆற்றல் இல்லாமையால் மீளவும் சிவபெருமானை அன்புடன் வழிபட, அவர்க்கு அதனைத் தருதற்பொருட்டு அப்பெருமான் தனது சத்தியைத் கூறிட்டமை வியக்கத்தக்கது.

English Meaning:

He bestowed on Damodara the divine discus,
But potent far was it for him to hold
And so he prayed to the Lord in fervour
And the Lord split its power in twain.

பாடல் எண்: 369

கூறது வாகக் குறித்துநற் சக்கரங்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து ..தரித்தனன் கோலமே

தமிழ் விளக்கம்:

சிவபெருமான், சலந்தராசுரன் உடலைப் பிளக்கக் கருதி உண்டாக்கிய சக்கரத்தைத் திருமாலுக்கு உரியதாகக் கொடுத் தான்; அதன்மேலும், அச் சக்கரத்தைத் தாங்குதற்பொருட்டுத் தனது சத்தியைக் கூறிட்டு அவனுக்குக் கொடுத்தான். அச் சத்திக்குத் தனது திருமேனியையே கூறிட்டுக் கொடுத்தான்.

English Meaning:

Splitting thus the power of goodly Chakra
One part He gave to Vishnu,
One part He gave to Sakti,
And that part He on His forehead assumed.

பாடல் எண்: 370

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரந்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே

தமிழ் விளக்கம்:

தக்கன் வேள்வியை அழித்த சிவகுமாரராகிய வீரபத்திரர்மேல் திருமால் போருக்குச் சென்று சந்திரனை அணிந்த அவரது தலையை அறுக்க என்று, முன்பு தான் சிவபெருமானிடம் பெற்ற சக்கரத்தை ஏவ, அஃது அவர் தமது வாயாற் செய்த உங்காரத்தாலே நாணி வலியிழந்தது.

English Meaning:

At the crescent-bedecked head of Valiant Lord,
That destroyed the depraved sacrifice of Daksha,
Damodara aimed his discus;
And then the doughty Lord sent forth a sneeze;
And lo! a gusty tempest blew
And down fell discus, powerless against Supreme God.

← அட்டவணைக்குச் செல்ல