சிவவாக்கியம் | SivaVaakkiyam | full |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| மலை கெடுத்தோர் மண் கெடுத்தோர் வான் கெடுத்தோர் ஞானம் தலை கெடுத்தோர் தன் கேடர் தாம். | மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந் தலைகெடுத்தோர் தற்கேடர் தாம். |
| பொருள் : திருவருள் உணர்வை இழந்தவர் மலையை இழந்தவரோடு ஒப்பர்; நிலத்தை இழந்தவரோடு ஒப்பர்; வானை இழந்தவரோடு ஒப்பர். அவர் தமக்குத் தாமே கேடு செய்து கொள்பவர் ஆவார். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| வெள்ளத்துள் நா வற்றி எங்கும் விடிந்து இருளாம் கள்ளத் தலைவர் கடன். | வெள்ளத்துள் நாவற்றி யெங்கும் விடிந்திருளாங் கள்ளத் தலைவர் கடன். |
| பொருள் : எங்கும் நிறைந்துள்ள திருவருள் இடத்திலேதான் எல்லா உயிர்களும் உள்ளன. ஆயினும் பொய்த் தலைவராகிய அந்த உயிர்கள் திருவருளால் வரும் பேரின்பத்தை நுகராமல் துன்புறுகின்றன. உயிர்களது இந்த நிலை, நல்ல நீர்ப் பெருக்கிலே நின்று கொண்டு ஒருவன் நீர் வேட்கையால் நா வறண்டு நிற்பதைப் போன்றது ஆகும். இதற்கு இன்னொரு உவமையும் கூறலாம். பொழுது விடிந்த பின்னும் அதனை உணராமல், இருள்வயப்பட்டு உறங்கிக் கிடப்பதைப் போன்றது திருவருளை உணராத நிலை என்றும் கூறலாம். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பரப்பு அமைந்து கேண்மின் இது பால் கலன் மேல் பூசை கரப்பு அருந்த நாடும் கடன். | பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூசை கரப்பருந்த நாடுங் கடன். |
| பொருள் : உலகப் பொருள்களின் மேல் பரந்து ஓடுகின்ற மனத்தை ஒரு நெறிப்படுத்தியாம் கூறுவதைக் கேளுங்கள். திருவருளை மறந்து உலகப் பொருள்களில் கிடைக்கும் அற்ப சுகத்தைப் பெறுதற்கு நீங்கள் விரைகிறீர்கள். இந்த விரைவு எது போன்றது எனில், பால் நிறைந்த கலத்தின் மேல் ஏறி அமர்ந்த பூனை அந்த பாலைப் பருக நினையாமல், சற்றுத் தொலைவில் காணப்படும் கரப்பான் என்னும் பூச்சியைப் பிடித்து உண்ணுதற்குக் கருதும் முறைமை போன்றதாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இற்றை வரை இயைந்தும் ஏதும் பழக்கம் இலா வெற்று உயிர்க்கு வீடு மிகை. | இற்றை வரையியைந்து மேதும் பழக்கமிலா வெற்றுயிர்க்கு வீடு மிகை. |
| பொருள் : உயிர் அன்று தொட்டு இன்று வரையிலும் திருவருளோடு தான் கூடியிருக்கிறது. ஆயினும் அத்திருவருளைத் தெரிந்து கொள்ளாமல் அதனோடு சிறிதேனும் பழகுதல் இல்லாமல் இருக்கிறதே. இப்படிப் பயனின்றி வாழ்கின்ற இந்த உயிருக்கு வீடு பெற என்ன தகுதி இருக்கிறது? | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அறியாமை உள் நின்று அளித்ததே காணும் குறியாக நீங்காத கோ. | அறியாமை யுள்நின் றளித்ததே காணுங் குறியாக நீங்காத கோ. |
| பொருள் : உயிர் பக்குவம் உறாதநிலையில் இறைவன் அவ்வுயிரின் உள்ளாக மறைந்து நின்று அவ்வுயிர் அறியாதபடி அதன் அறிவைச் சிறிது சிறிதாக வளர்த்து வருவான். அவ்வுயிர் உண்மையை உணர்ந்து கொள்ளும் பக்குவம் எய்திய பொழுது அவ்விறைவனே கண்ணால் காணும் வடிவினையுடைய ஞானாசிரியனாய்த் தோன்றி வந்து அப்பக்குவ ஆன்மாவுக்குத் திருவருளைத் தெளிய உணர்த்துவான். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அகத்து உறு நோயக்கு உள்ளினர் அன்றி அதனைச் சகத்தவருங் காண்பரோ தான். | அகத்துறுநோயக் குள்ளின ரன்றி யதனைச் சகத்தவருங் காண்பரோ தான். |
| பொருள் : வீட்டில் ஒருவர் நோயுற்றால் அவரது நோயின் தன்மையை அவ்வீட்டினுள் உள்ளவரே அறிவார். வெளியில் உள்ள பிறர் அதனை அறிவாரோ? அறியமாட்டார். அதுபோல, உயிரிடத்துப் பொருந்திய அறியாமையாகிய நோயினது நிலையை உயிரினுள் இருப்பவனாகிய இறைவனே அறிய வல்லான். உலகத்தவராகிய பிறர் அதனை எங்ஙனம் அறிதல் இயலும்? | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அருளா வகையால் அருள் புரிய வந்த பொருள் அர் அறிவார் புவி. | அருளா வகையா லருள்புரிய வந்த பொருளா ரறிவார் புவி. |
| பொருள் : சிவமாகிய முதற்பொருளே நேர் நின்று அருளாமல் குரு வடிவில் மறைந்து நின்று அருள் செய்ய நினைந்து இவ்வாறு வந்திருக்கிறது என்பதை உலகத்தார் உணரமாட்டார்கள். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பொய் இருண்ட சிந்தைப் பொறி இலார் போதம் ஆம் மெய் இரண்டுங் காணார் மிக. | பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம் மெய்யிரண்டுங் காணார் மிக. |
| பொருள் : ஆணவ மலமறைப்பினால் இருண்ட அறிவினையுடைய, பக்குவம் இல்லாத மாந்தர் ஞானமாகிய அருளையும் அறியார். அந்த அருளின் வடிவாகிய ஞானகுருவின் நிலையையும் அறியார். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பார்வை என மாக்களை முன் பற்றிப் பிடித்தற்காம் போர்வை எனக் காணார் புவி. | பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம் போர்வையெனக் காணார் புவி. |
| பொருள் : பழகிய விலங்கைக் காட்டிக் காட்டு விலங்குகளைக் கைப்பற்றுவதுபோல, இறைவன் நம்மைப் போல் இருப்பவராகிய ஞான குருவைக் கொண்டு பக்குவ ஆன்மாக்களை வயப்படுத்தி ஆட்கொள்ளுகிறான். இறைவன் தன்னை மறைத்துக் கொண்டு வரும் போர்வையே குருவடிவம் என்ற உண்மையை உலகத்தார் உணர மாட்டார். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| எமக்கு என் எவனுக்கு எவை தெரியும் அவ் அவ் தமக்கு அவனை வேண்டத் தவிர். | எமக்கென் னெவனுக் கெவைதெரியு மவ்வத் தமக்கவனை வேண்டத் தவிர். |
| பொருள் : எந்த ஒருவனுக்கு எந்தக் கலை தெரியுமோ அந்தக் கலையை அறிந்து கொள்வதற்கு அந்த ஒருவனது துணையையே நாட வேண்டியுள்ளது. அப்படியிருக்க, ஞானமாகிய அரிய பொருளை அறிய விரும்பும் நாம் அந்த ஞானத்தை உணர்த்தும் வல்லமையுடைய ஞானாசிரியரின் துணையை அல்லவா நாட வேண்டும்? அப்படிச் செய்யாமல், ஞானாசிரியரின் துணை இல்லாமலே ஞானத்தைப் பெறலாம் என்று கருதுவது பேதமையாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| விடம் நகிலம் மேவினும் மெய்ப் பாவகனின் மீளுங் கடனில் இருள் போவது இவன் கண். | விடநகிலம் மேவினுமெய்ப் பாவகனின் மீளுங் கடனிலிருள் போவதிவன் கண். |
| பொருள் : பாம்பு கடித்து ஏறிய நஞ்சானது, பாம்புக்குப் பகையாகிய கீரியே வந்து கடிபட்டவன் உடல் மீது விழுந்து புரண்டாலும் நீங்காது. ஆயின், மாந்திரிகன் ஒருவன் மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவித்து அந்த மந்திர வடிவேயாக நின்று பார்க்கும் பார்வையினால் அந்தவிடம் நீங்குவதாகும். உயிரில் உள்ள மலமாகிய இருள் நீங்குவதும் இம்முறைமையில் ஆகும். இறைவன் உயிர்க்கு உயிராக உடன் நின்ற போதிலும் <உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்குவதில்லை. இறைவனாய் நிற்கும் ஞான குருவின் திருநோக்கத்தாலேயே அது நீங்குவதாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அகலத் தரும் அருளை ஆக்கும் வினை நீக்குஞ் சகலர்க்கு வந்து அருளும் காண். | அகலத் தருமருளை யாக்கும் வினைநீக்குஞ் சகலர்க்கு வந்தருளுங் காண். |
| பொருள் : இறைவன் விஞ்ஞானகலர் ஆகிய உயிர்களுக்கு உள்ளிருந்தே ஞானத்தை உணர்த்துவான்; பிரளயாகலர் ஆகிய உயிர்களுக்குத் தெய்வ வடிவில் முன்தோன்றி அவரைப் பிணித்துள்ள வினையை நீக்கி ஞானத்தை அருள்வான். சகலர் ஆகிய உயிர்களுக்கு ஆசிரியர் வடிவில் வந்து அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தை அருள்வான். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஆர் அறிவார் எல்லாம் அகன்ற நெறி அருளும் பேர் அறிவான் வாராத பின். | ஆரறிவா ரெல்லா மகன்ற நெறியருளும் பேரறிவான் வாராத பின். |
| பொருள் : ஆசை முதலிய குற்றங்களை யெல்லாம் அகன்றொழியச் செய்வது ஞானம். அப்படிப்பட்ட ஞானத்தைத் தர வல்லவன் முற்றறிவினை உடைய இறைவன் ஒருவனே. அவன் குருவாய் வந்து உணர்த்தாவிடின் மெய்யுணர்வாகிய ஞானத்தை யார்தாம் உணரமுடியும்? | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஞானம் இவன் ஒழிய நண்ணி இடும் நல் கல் அனல் பானு ஒழியப் படின். | ஞான மிவனொழிய நண்ணியிடும் நற்கல்லனற் பானு வொழியப் படின். |
| பொருள் : சூரிய காந்தக் கல்லினிடத்தில் சூரியனது ஒளி படாமலே நெருப்புத் தோன்றுதல் கூடுமாயின், ஆன்மாவினிடத்தில் அருட்குரு இல்லாமலே ஞானம் தோன்றுதல் கூடும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| நீடும் இரு வினைகள் நேர் ஆக நேர் ஆதல் கூடும் இறை சத்தி கொளல். | நீடு மிருவினைகள் நேராக நேராதல் கூடுமிறை சத்தி கொளல். |
| பொருள் : முன்னே செய்து கொண்ட இருவினைகளின் பயன்களாய் வருகின்ற இன்பத் துன்பங்கள் ஆன்ம அறிவில் சமமாய் உணரப்படும் நிலை வருங்காலத்தில் அந்த ஆன்மா இறைவனது திருவருளைப் பெறுதல் கூடும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஏகன் அநேகன் இருள் கருமம் மாயை இரண்டு ஆக இவை ஆறு அதியில். | ஏக னநேக னிருள்கரும மாயையிரண் டாகவிவை யாறாதி யில். |
| பொருள் : ஒருவனாகிய இறைவனும், பலவாகிய உயிரும், ஆணவமும், கன்மமும், சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு மாயையும் ஆகிய இந்த ஆறு பொருள்கள் தோற்றம் இல்லாதவையாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| செய்வானும் செய் வினையும் சேர் பயனும் சேர்ப்பவனும் உய்வானும் உளன் என்று உணர். | செய்வானுஞ் செய்வினையுஞ் சேர்பயனுஞ் சேர்ப்பவனு முய்வானு முளனென் றுணர். |
| பொருள் : மாணவனே, வினையைச் செய்பவனாகிய நீயும், உன்னால் செய்யப்படுவனவாகிய இருவினைகளும், அவற்றின் பயன்களாகிய இன்பத் துன்பங்களும், அப்பயன்களை உன்னோடு கூட்டுவிப்பவனாகிய இறைவனும் என இம்முறையில் நீ பாசத்தோடும் பதியோடும் தொடர்பு கொண்டுள்ளாய். இவ்வாறு யான் உள்ளேன் என்று உன்னியல்பை உணர்வாயாக. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே ஊனொடு உயிர் தான் உணர்வோடு ஒன்றாம் தரம். | ஊனுயிரால் வாழு மொருமைத்தே யூனொடுயிர் தானுணர்வோ டொன்றாந் தரம். |
| பொருள் : உடம்போடு சேர்ந்து நிற்பதாகிய உயிர் நிறைந்த ஞானமாகிய திருவருளோடு பிரிப்பின்றிக் கூடி வாழ்கிறது. திருவருளோடு உயிர் சேர்ந்து வாழும் ஒற்றுமை எது போன்றது எனில், உயிரோடு கூடி வாழும் உடம்பு அந்த உயிரோடு கொண்டுள்ள ஒற்றுமையைப் போன்றது ஆகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தன் நிறமும் பல் நிறமும் தானாம் கல் தன்மை தரும் பொன் நிறம் போல் மன்னிறம் இப் பூ. | தன்னிறமும் பன்னிறமுந் தானாங்கற் றன்மைதரும் பொன்னிறம்போல் மன்னிறமிப் பூ. |
| பொருள் : பளிங்குக் கல் தனக்குப் பக்கத்தில் உள்ள பல பொருள்களின் நிறங்களையும் கவர்ந்து அப் பன்னிறங்களையே தன் நிறமாகக் காட்டி நிற்கும். இனி, சூரியன் உச்சியில் வரும்போது, பக்கத்தில் பல பொருள்கள் இருப்பினும் பளிங்குக் கல் அவற்றின் நிறங்களைக் கவராமல் தன் ஒளியை மட்டுமே தோற்றி நிற்கின்ற நிலையும் உண்டு. இங்ஙனம், பிற பொருள்களின் நிறத்தைக் காட்டி நிற்றலும், தனது நிறத்தை மட்டும் காட்டி நிற்றலும் ஆகிய இரு தன்மைகள் பளிங்கிற்கு உண்டு என அறியலாம். பளிங்கிற்கு அவைமுறையே பொதுவியல்பும், தன்னியல்பும் ஆகும். அவ்விரு தன்மைகளையும் பளிங்கிற்குத் தருவது சூரியனது ஒளியேயாகும். சூரியவொளி இன்றேல் பளிங்கு பிற பொருள்களின் நிறங்களைக் கவர்தலும், தனது ஒளியை மட்டும் தோற்றி நிற்றலும் ஆகிய இரண்டும் இல்லையாம். அச்சூரியவொளி போன்றது இறைவனது திருவருள். திருவருளின் உதவியாலேயே உயிர்களுக்குக் கட்டு நிலையில் பொது வியல்பும், முத்திநிலையில் தன்னியல்பும் விளங்குகின்றன. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| கண் தொல்லை காணும் நெறி கண் உயிர் நாப்பண் நிலை உண்டு இல்லை அல்லது ஒளி. | கண்டொல்லை காணுநெறி கண்ணுயிர் நாப்பண்ணிலை யுண்டில்லை யல்ல தொளி. |
| பொருள் : கண் தொன்று தொட்டுப் பொருளைக் கண்டு வரும் முறைமை, கண்ணிற்கும் உயிருக்கும் இடையே ஒளி நிற்பதனால் உண்டாகின்றது. அவ்வாறு ஒளி நில்லாவிடில் கண் பொருளைக் காணுதல் என்பது நிகழாது. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| புன் செயலினோடு புலன் செயல் போல் நின் செயலை மன் செயலதாக மதி. | புன்செயலி னோடு புலன்செயல்போல் நின்செயலை மன்செயல தாக மதி. |
| பொருள் : சிற்றின்பப் பொருள்களின் மேல் விரைந்து செல்லுகின்ற ஐம்பொறிகளின் செயல், உண்மையில், அப்பொறிகளைச் செலுத்துகின்ற உயிரின் செயலேயாகும். அதுபோல, மாணவனே, நீ செய்யும் செயல்கள் யாவும் உனக்கு முதலாகிய திருவருளின் செயல் என்றே அறிவாயாக. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஓராதே ஒன்றையும் உற்று உன்னாதே நீ முந்திப் பாராதே பார்த்ததனைப் பார். | ஓராதே வொன்றையுமுற் றுன்னாதே நீமுந்திப் பாராதே பார்த்ததனைப் பார். |
| பொருள் : மனம், மொழி, மெய்களின் தொழிற்பாடாகிய முயற்சிகளுள் யாதொன்றையும் உன்னுடையதாகக் கருதாதே. அம் முயற்சியால் விளையும் நலம் தீங்குகளை உன்னுடையனவாகக் கொண்டு அவற்றில் அழுந்தாதே. தற்போதம் நீங்கிய இடத்து வேறற விளங்கி நிற்பதாகிய திருவருளை உனது தற்போதத்தினால் காண முற்படாதே. உன்னறிவில் நிலைத்து நின்று உன்னைக் கண்டு வருவதாகிய அத்திருவருளை மனம் அசைவற நின்று காண்பாயாக. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| களியே மிகு புலமாய்க் கருதி ஞான ஒளியே ஒளியாய் ஒளி. | களியே மிகுபுல மாய்க்கருதி ஞான வொளியே வொளியா வொளி. |
| பொருள் : ஞானமாகிய அருள் வழியாக உண்டாகும் இன்பத்தையே அடையத்தக்க மேலான பேரின்பமாக உணர்ந்து, அத்திருவருள் ஞானத்தையே பற்றாகப் பற்றி நின்று, அந்த ஞான ஒளிக்குள் புகுந்து நீ ஒளிந்து நிற்பாயாக. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| கண்டபடியே கண்டு காணாமை காணாமல் கொண்டபடியே கொண்டு இரு. | கண்டபடி யேகண்டு காணாமை காணாமற் கொண்டபடி யேகொண் டிரு. |
| பொருள் : மாணாக்கனே, அறியாமையாகிய கேவலம் வந்து பொருந்தாதவாறு, கருவிகளை உனக்கு வேறாகக் கண்டு நீங்கித் திருவருள் ஞானத்தைப் பற்றி நின்றாய். பின்னும் அவ்வாறு அதனையே விடாது பற்றி நிற்பாயாக. அவ்வாறு நின்றால் அத்திருவருள் உன்னைத் தன்னிடத்து அடக்கிக் கொள்ளும். அது உன்னை விழுங்கிக் கொள்ளுமாறு அதற்கு இசைந்த நிலையினையே நீயும் மேற்கொண்டிரு. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தூ நிழல் அர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இது போல் தான் அதுவாய் நிற்கும் தரம். | தூனிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல் தானதுவாய் நிற்குந் தரம். |
| பொருள் : வெயிலில் அலைந்து வருந்தியவன் குளிர்ந்த நிழலை உடைய இடத்தைக் கண்டால் பிறர் சொல்லாதிருக்கவும் தானே அவ்விடத்தை அடைந்து நிழலில் அடங்கி நின்று இன்புறுவான். அதுபோல, அறியும் நெறியால் திருவருளை உணர்ந்த உயிர் தான் வேறாய் நில்லாமல் அத்திருவருளோடு ஒன்றுபட்டு அதனுள் அடங்கி அதுவேயாய் நிற்கும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தித்திக்கும் பால் தானும் கைக்குந் திருந்திடும் நாப் பித்தத்தில் தான் தவிர்ந்த பின். | தித்திக்கும் பாடானுங் கைக்குந் திருந்திடுநாப் பித்தத்தி டான்டவிர்ந்த பின். |
| பொருள் : பால் தித்திப்பாக இருப்பது அதன் இயற்கை. அந்த இயற்கைக்கு மாறாகப் பால் கசப்பது நாவில் சேர்ந்த பித்தம் என்னும் செயற்கையினால் ஆகும். பித்தமாகிய செயற்கை நீங்கியபோது பால் இயற்கையான தித்திப்பையே உடையதாகும். அதுபோல, உயிருக்கு என்றும் உறவுப் பொருளாக இருப்பது திருவருள். அவ்வியல்புக்கு மாறாகத் திருவருள் பகைப் பொருளாக உயிர்க்குத் தோன்றுதல் அவ்வுயிரைப் பற்றியுள்ள ஆணவ மலமாகிய செயற்கையினால் ஆகும். அச்செயற்கை நீங்கியபோது, திருவருள் இயற்கையான உறவுப் பொருளாகவே தோன்றும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| காண்பான் ஒளி இருளி்ல் காட்டிடவும் தான் கண்ட வீ்ண் பாவம் எந்நாள் விடும். | காண்பா னொளியிருளி்ற் காட்டிடவுந் தான்கண்ட வீ்ண்பாவ மெந்நாள் விடும். |
| ம் தான்கண்ட வீண் பாவம் என்னாய் விடும்? பொருள் : ஒருவன் இருளில் நிற்குங் காலத்தில் ஒளி தோன்றி எப்பொருளையும் அவன் காணுமாறு அவற்றை அவனுக்குக் காட்டுகிறது. ஆனால், அவன் அவ்வொளியினாலேயே தான் கண்டதாக எண்ணுவதில்லை. தானே கண்டு விட்டதாகக் கருதிக் கொள்கிறான். அதுபோலப் பெத்த நிலையிலும், முத்தி நிலையிலும் உயிர் யாதொன்றையும் அறியும் படியாகத் திருவருளே அறிவித்து வருகிறது. யாதொரு செயலையும் செய்யும்படியாகத் திருவருளே செய்வித்து வருகிறது. ஆனால், உயிர் திருவருளாலேயே தனக்கு அறிவும் செயலும் நிகழ்கின்றன என்பதை எண்ணுவதில்லை. தானே அறிந்தும் செய்தும் வருவதாகக் கருதுகிறது. இது பொய்யான கருத்தாகும். இப்பொய்க் கருத்து என்ன பயனைச் செய்யும்? | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை தெளிவு தெளியார் செயல். | ஒளியு மிருளு மொருமைத்துப் பன்மை தெளிவு தெளியார் செயல். |
| பொருள் : ஒளியும், இருளும் ஒரு வகையில் ஒத்த தன்மை உடையனவாம். அஃதாவது, சூரியனுடைய பேரொளியை நோக்கும் போதும் கண் தெரியாது. இருளிலும் கண் தெரியாது. ஒளியில் அழுந்தியபோதும், இருளில் அழுந்தியபோதும் கண் பிற பொருள்களைக் காண மாட்டாததாகிறது. இஃது ஒப்புமை. இனி இரண்டிடத்திலும் கண் செயலற்று விடினும் இரண்டும் ஒன்றாவதில்லை. இரண்டிற்கும் என்ன வேறுபாடு எனில், ஒன்று ஒளியால் நிகழ்கின்ற தெளிந்த நிலை. மற்றொன்று இருளால் விளைகின்ற தெளியா நிலை. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| கிடைக்கத் தகுமே நல் கேண்மையார்க்கு அல்லால் எடுத்துச் சுமப்பானை இன்று. | கிடைக்கத் தகுமேநற் கேணமையார்க் கல்லா லெடுத்துச் சுமப்பானை யின்று. |
| பொருள் : இறைவன், தம் செயலற்று நிற்கும் அன்பரை எவ்விடத்தும் தாங்கிக் காப்பான்; அவரைத் தன் மேல் வைத்துச் சுமந்து செல்லும் துணைவனாய் இருப்பான். இப்படிப்பட்ட துணை வனை ஏனையோர் பெறுதல் கூடுமோ? | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதி கவரத் துஞ்சினனோ போயினனோ சொல். | வஞ்ச முடனொருவன் வைத்த நிதிகவரத் துஞ்சினனோ போயினனோ சொல். |
| பொருள் : ஒருவன் வைத்துள்ள நிதியை மற்றொருவன் கள்ளமாய்க் கவர்ந்து கொள்வதற்கு, வைத்திருப்பவன் உறங்கி விட்டானோ? அல்லது அவ்விடத்தை விட்டுப் போய்விட்டானோ? சொல்வாயாக. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தனக்கு நிழல் இன்றாம் ஒளி கவரும் தம்பம் எனக் கவர நில்லாது இருள். | தனக்கு நிழலின்றா மொளிகவருந் தம்ப மெனக்கவர நில்லா திருள். |
| பொருள் : உச்சிவேளையில் பளிங்குத் தூண் பிற பொருள்களின் நிழல்கள் தன்னிடத்தில் படியாதபடி சூரியவொளி ஒன்றையே கவர்ந்து நிற்கும். அப்பளிங்குத் தூண்போல், உயிர் தன்னிடத்தில் பிற உணர்வுகள் சிறிதும் எழாதபடி திருவருள் ஒன்றையே முழுதுமாகப் பற்றி நிற்குமாயின் மலஇருள் அடியோடு நீங்குவதாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| உற்கை தரும் பொன் கை உடையவர் போல் உண்மைப் பின் நிற்க அருளார் நிலை. | உற்கைதரும் பொற்கை யுடையவர்போ லுண்மைப்பின் னிற்க வருளார் நிலை. |
| பொருள் : இருளில் நடப்போர் தீப்பந்தத்தை ஏந்தி வருகிறவன் முன்னே செல்லத் தாம் அவன் பின்னே செல்வர். அதுபோலப் பாசப் பற்றாகிய இருளை விலக்கி ஞானநெறியிற் செல்லும் உயிர்களுக்கு உதவியாக இறைவன் தனது திருவருள் ஒளியை வழங்கி வருகின்றான். உயிர் அவனுக்குப் பின் நிற்றலே திருவருளை முற்றப் பெறும் முறையாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஐம்புலனால் தாம் கண்டது என்றால் அது ஒழிய ஐம்புலனார் தாம் ஆர் அதற்கு. | ஐம்புலனாற் றாங்கண்ட தென்றா லதுவொழிய வைம்புலனார் தாமா ரதற்கு. |
| பொருள் : உயிர் ஐம்பொறி முதலிய கருவிகளைக் கொண்டு அறிந்து வந்ததெல்லாம் மெய்ப் பொருளாகிய சிவம் நீங்கலாக ஏனையவற்றையேயாம். அப்படியிருக்க, முத்திக் காலத்தில் அம்மெய்ப் பொருளை அறிவதற்கு அக்கருவிகள் துணையாதற்கு என்ன உரிமையுடையன? இனி, அக்கருவிகள் இன்றி ஒன்றையும் அறிய மாட்டாத உயிர்களும் தனியாய் நின்று அம்மெய்ப் பொருளை அறிதற்கு என்ன உரிமையுடையன? | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தாமே தருபவரைத் தம் வலியினால் கருதல் ஆமே இவன் அர் அதற்கு. | தாமே தருபவரைத் தம்வலியி னாற்கருத லாமே யிவனா ரதற்கு. |
| பொருள் : முதல்வன் தானே தனது கருணையினால் உயிருக்கு ஞானத்தைத் தந்து தன்னை உணர்த்தி நிற்கிறான். அங்ஙனமாக, அம்முதல்வனை உயிர் தானே தன் முயற்சியினால் அடைந்ததாகக் கருதுவது பொருந்துமோ? முதல்வனை இவ்வுயிர் தனது வலிமையால் பெறுவதற்கு என்ன உரிமையுடையது. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இன்புறுவார் துன்பார் இருளின் எழும் சுடரின் பின் புகுவார் முன் புகுவார் பின். | இன்புறுவார் துன்பா ரிருளி னெழுஞ்சுடரின் பின்புகுவார் முன்புகுவார் பின். |
| பொருள் : பக்குவம் வருவதற்கு முன்னே, துன்பம் தரும் இருளில் வழி காட்டி வருகின்ற திருவருள் ஒளிக்கு முன்னால் சென்றவர், பக்குவம் வந்த காலத்தில் அதன் பின்னால் செல்வர்; அவ்வாறு பின் சென்று பேரின்பமாகிய பயனை அடைவர். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம் ஒருவன் ஒருத்தி உறின். | இருவர் மடந்தையருக் கென்பயனின் புண்டா மொருவ னொருத்தி யுறின். |
| பொருள் : பெண் பாலார் இருவர் சேர்வதிலே இன்பம் இல்லை. பெண் மகள் ஒருத்தியும் ஆடவன் ஒருவனும் கூடும் கூட்டத்திலேயே இன்பம் உண்டாகும். அதுபோல, உயிர் அருளோடு சேரும் நிலையில் இன்பமில்லை. உயிர் அருளுக்கு முதலாகிய, சிவத்தோடு கூடும் போதே பேரின்பம் விளையும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம் இன்ப கனம் ஆதலினால் இல். | இன்பதனை யெய்துவார்க் கீயு மவர்க்குருவ மின்பகன மாதலினா லில். |
| பொருள் : தன்னை அடைந்தார்க்கு இன்பத்தை வழங்குகின்ற இறைவன் இன்பமயமான வடிவினன். அப்படிப்பட்ட அவன் அவ்வின்பத்தைத் தான் நுகர்தல் என்பது இல்லை. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தாள் தலை போல் கூடி அவை தான் நிகழா வேறு இன்பக் கூடலை நீ ஏகம் எனக் கொள். | தாடலைபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக் கூடலைநீ யேகமெனக் கொள். |
| பொருள் : தாள், தலை என்னும் இரு சொற்கள் புணர்ந்து, இரண்டாகக் காணப்படுதல் இன்றித் தாடலை என ஒரு சொல்லாய் நிற்கின்றன. இச் சொற்புணர்ச்சி போல உயிரும் சிவமும் ஆகிய இரண்டும் தம்முட் கலந்து வேறாய் நில்லாத பேரின்பப் புணர்ச்சியையே ஒன்றாதல் ஆகிய முத்திநிலை என்று நீ கொள்வாயாக. மாணவனை முன்னிலைப்படுத்தி ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஒசை எழாது என்றால் ஒன்று அன்று இரண்டும் இல். | ஒன்றாலு மொன்றா திரண்டாலு மோசையெழா தென்றாலொன் றன்றிரண்டு மில். |
| பொருள் : உயிரும் கடவுளும் பொருளால் ஒன்றே எனில், முத்தியில் ஒன்றுதல் என்பது நிகழாது. ஒன்றுதலாவது இரு பொருள்களின் செயலாகும். பொருள் ஒன்றே உள்ளது என்றால், ஒன்றுதல் என்பது எப்படி நிகழ முடியும்? இனி, முத்தியில் உயிரும் கடவுளும் இரண்டாய் நிற்கும் என்றலும் பொருந்தாது. அவை இரண்டாய்ப் பிரிந்து நிற்பின் அங்கே ஒன்றுதல் என்னும் பேச்சு எழுவதற்கே வழியில்லை. இதனால், முத்தியில் உயிர் இறைப்பொருளோடு ஒன்றாய்ப் போய் விடாமலும், உயிரும் இறைவனும் தம்முள் இயையாத வேறுபட்ட இரண்டு பொருள்களாய் நில்லாமலு<ம், உயிர் இறைவனோடு கலப்பினால் ஒன்றாய் நின்று பேரின்பத்தை நுகரும் என்பது பெறப்படும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| உற்றாரும் பெற்றாரும் ஓவாது உரை ஒழியப் பற்றாரும் அற்றார் பவம். | உற்றாரும் பெற்றாரு மோவா துரையொழியப் பற்றாரு மற்றார் பவம். |
| பொருள் : தாம் வேறு நில்லாது திருவருளிற் பொருந்தி அதனோடு ஒன்றாய் நின்றவரும், அதன்மேல் சிவப் பேற்றினை எய்தி நிட்டையில் நின்றவரும் மெய்ப் பொருளை ஒருபோதும் நீங்க மாட்டார். அவர்க்கு இனிப் பிறவி இல்லை. இந்த உற்றாரும், பெற்றாரும் போல மெய்ப் பொருள் ஒன்றையே பற்றமாட்டாமல் கேட்டல், சிந்தித்தல் என்ற படிநிலைகளில் நிற்ப வரும் மேற்படிகளை எய்திப் பிறவி அறும் நிலையைப் பெறுவார்கள். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி நீ ஒன்றும் செய்யாது நில். | பேயொன்றுந் தன்மை பிறக்கு மளவுமினி நீயொன்றுஞ் செய்யாது நில். |
| பொருள் : மாணவனே, பேய் வசப்பட்டாரது தன்மை போல அருள் வயப்பட்டு நிற்கும் தன்மை உனக்கு உண்டாகும் வரையும், நீ தன் முனைப்போடு யாதொரு செயலு<ம் செய்யாமல் நிற்பாயாக. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஒள் பொருள் கண் உற்றார்க்கு உறு பயனே அல்லாது கண் படுப்போர் கைப் பொருள் போல் காண். | ஒண்பொருட்க ணுற்றார்க் குறுபயனே யல்லாது கண்படுப்போர் கைப்பொருள்போற் காண். |
| பொருள் : மெய்ப் பொருளாகிய சிவத்தில் அழுந்தினவர்களுக்கு அதனால் வரும் பேரின்பம் ஒன்று தவிர ஏனையவெல்லாம், உறங்கிப் போனவனது கையிலுள்ள பொருள் தானே நழுவுவது போலத் தாமே நீங்கிவிடும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| மூன்றாய தன்மை அவர் தம்மின் மிக முயங்கித் தோன்றாத இன்பம் அது என் சொல். | மூன்றாய தன்மையவர் தம்மின் மிகமுயங்கித் தோன்றாத வின்பமதென் சொல். |
| பொருள் : சிவனும் உயிரும் ஆகிய அவ்விருவரும் தம்முள் மிகவும் கலந்து ஒன்றாய் நின்ற அந்நிலையில் உயிர் பேரின்பத்தை நுகரும். அவ்வின்ப அனுபவத்தில் அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்றும் இருந்தாலும் அம்மூன்றும் வெவ்வேறாகத் தோன்றுவது இல்லை. மூன்று பொருள் என்ற வேறுபாடு தோன்றாத ஒருமை நிலை அது. உயிர் தன்னை மறந்து, தனது அறிவை மறந்து சிவம் ஒன்றையே அறிந்து அதில் அழுந்தியிருக்கும். அவ்வின்ப அனுபவம் இன்னவாறு இருந்தது என்று எவ்வாறு சொல்ல இயலும்? | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம் அன்பு நிலையே அது. | இன்பி லினிதென்ற லின்றுண்டே லின்றுண்டா மன்பு நிலையே வது. |
| பொருள் : இன்பங்கள் எல்லாவற்றிலும் இனிமையுடையது எனச் சிறப்பிக்கப்படும் முத்தியின்பத்தை இப்பிறப்பிலேயே பெறலாம். அதற்கு முன்னே ஆன்மா ஒன்றைப் பெறவேண்டும். அந்த ஒன்று எது எனில், இறைவனிடத்தில் இடையறாது அன்பு செய்து நிற்கும் நிலையேயாகும். இந்த அன்பு நிலை இன்று உண்டானால், பேரின்பமும் இப்பொழுதே உண்டாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அருள் நூலும் ஆரணமும் அல்லாது ஐந்தின் பொருள் நூல் தெரியப் புகின். | அருணூலு மாரணமு மல்லாது மைந்தின் பொருணூ டெரியப் புகின். |
| பொருள் : அருள் நூலாகிய ஆகமங்களும், அற நூலாகிய வேதங்களும், இவையல்லாத பிற நூல்களும் ஆகிய யாவும் திருவைந்தெழுத்தின் பொருளை விளக்கும் நூல்களேயாம். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இறை சத்தி பாசம் எழில் மாயை ஆவி உற நிற்கும் ஓங்காரத்து உள். | இறைசத்தி பாச மெழில் மாயை யாவி யுறநிற்கு மோங்காரத் துள். |
| பொருள் : ஓங்காரத்தின் பரிணாமம் ஆகிய ஐந்தெழுத்தில் இறையும், அதன் சத்தியும், தளையாகிய ஆணவமும், எழில் மிக்க மாயையும், ஆன்மாவும் என்பவை பொருளாகப் பொருந்தி நிற்கும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஊன நடனம் ஒருபால் ஒரு பாலாம் ஞான நடனம் தான் நடுவே நாடு. | ஊன நடன மொருபா லொருபாலாம் ஞானநடனந் தானடுவே நாடு. |
| பொருள் : சிவாய நம என்னும் திருவைந்தெழுத்தில் ஊன நடனத்தைக் குறிக்கும் பொருள்கள் ஒரு பக்கம் சேர்ந்திருக்க, ஞான நடனத்தைச் செய்யும் பொருள்கள் மற்றொரு பக்கம் சேர்ந்திருக்க, அந்நடனங்களால் பயன் அடைகின்ற உயிர் அவ்விரு பொருள்களுக்கும் இடையே நிற்கும். மாணவனே, இதனை ஆராய்ந்து உணர்வாயாக. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| விரியமந மேவி யவ்வை மீள விடா சித்தம் பெரிய வினை தீரில் பெறும். | விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம் பெரியவினை தீரிற் பெறும். |
| பொருள் : ஆணவ மலமும், அது காரணமாகத் திரோதான சத்தி, மாயை, கன்மம் ஆகியனவும் உயிரை அழுத்தமாகப் பற்றியுள்ளன. அவை தம்மினின்றும் உயிரை மீண்டு போக விடுவதில்லை. உயிரினது பழவினை முழுதும் கெடுமாயின் உயிர் ஞானம் பெற்று அவற்றினின்றும் மீண்டு சிவத்தை அடையும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| மாலார் திரோதம் மலம் முதலாய் மாறுமோ மேல் ஆகி மீளா விடின். | மாலார் திரோத மலமுதலாய் மாறுமோ மேலாகி மீளா விடின். |
| பொருள் : மயக்கம் பொருந்திய திரோதான சத்தியைக் குறிக்கின்ற நகாரமும், ஆணவ மலத்தைக் குறிக்கின்ற மகாரமும் முதலாய் நிற்க, சிவத்தைக் குறிக்கின்ற சிகாரம் முதலாகும் படி மீளுதல் இல்லையென்றால் பாசநிலை நீங்குமோ? நீங்காது. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஆராதி ஆதாரம் அந்தோ அது மீண்டு பாராது மேல் ஓதும் பற்று. | ஆராதி யாதார மந்தோ வதுமீண்டு பாராது மேலோதும் பற்று. |
| பொருள் : விசேடதீக்கை பெற்ற மாணவனே, நீ எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் உள்ள சிவத்தை வழிபடு. (அஃதாவது, சிகாரத்தை முதலாக வைத்துத் திருவைந்தெழுத்தை ஓது). அவ்வாறு சிகாரம் முதலாக மீளுமாறு ஓதாமல் மேலும் மேலும் நகாரத்தை முற்படக் கொண்டு ஓதுவதற்கு ஏதுவாகிய உலகப்பற்று, அந்தோ! மிகவும் இரங்கத்தக்கது. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| சிவ முதலே ஆமாறு சேருமேல் தீரும் பவம் இது நீ ஒதும் படி. | சிவமுதலே யாமாறு சேருமே றீரும் பவமிதுநீ யோதும் படி. |
| பொருள் : திருவைந்தெழுத்தில் சிகாரம் வகாரம் என்னும் இரண்டும் முதலில் வருமாறு உச்சரித்தல் கூடுமாயின் பிறவி நீங்கும். பிறவிக்கு அஞ்சுகின்ற நீ ஓத வேண்டிய முறைமை இதுவாகும். | |