73. உயிரும் தருகுவன்! பாடியவர்:சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம். திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி, ஈயென இரக்குவர் ஆயின், சீருடை முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்; இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் துஞ்சு புலி இடறிய சிதடன் போல, உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக் கழைதின் யானைக் கால் அகப் பட்ட வன்றிணி நீண்முளை போலச், சென்று அவண் வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே! புறநானூறு > பாடல்: 73