58. புலியும் கயலும்! பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். பாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும் பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும். குறிப்பு: இருவேந்தரும் ஒருங்கிருந்தபோது பாடியது. திணை: பாடாண். துறை : உடனிலை. நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத், தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது. நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ, இளையது ஆயினும் கிளைஅரா எறியும், அருநரை உருமின், பெருநரைப் பொறாஅச் செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே, அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே, நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென, வரைய சாந்தமும், திரைய முத்தமும், இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும், தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே; பால்நிற உருவின் பனைக்கொடி யோனும், நீல்நிற உருவின், நேமியோனும், என்று இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு, உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி, இந்நீர் ஆகலின், இனியவும் உளவோ? இன்னும் கேண்மின் நும் இசைவா ழியவே; ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே; அதனால், நல்ல போலவும், நயவ போலவும், தொல்லோர் சென்ற நெறியர் போலவும், காதல் நெஞ்சின்நும் புணர்ச்சி; வென்று வென்று அடுகளத்து உயர்க நும் வேலே; கொடுவரிக் கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி நெடுநீர்க் கெண்டையடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே.
புறநானூறு > பாடல்: 58
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக