180. நீயும் வம்மோ! பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார். பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன். திணை: வாகை. துறை: வல்லாண்முல்லை; பாணாற்றுப் படையும் ஆம். நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே; இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே; இறையுறு விழுமம் தாங்கி, அமர்அகத்து இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து, மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி, வடுவின்றி வடிந்த யாக்கையன், கொடையெதிர்ந்து, ஈர்ந்தை யோனே, பாண்பசிப் பகைஞன்; இன்மை தீர வேண்டின், எம்மொடு நீயும் வம்மோ? முதுவாய் இரவல! யாம்தன் இரக்கும் காலைத், தான்எம் உண்ணா மருங்குல் காட்டித், தன்ஊர்க் கருங்கைக் கொல்லனை இரக்கும், ‘திருந்திலை நெடுவேல் வடித்திசின்’ எனவே.
புறநானூறு > பாடல்: 180
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக