367. வாழச் செய்த நல்வினை! பாடியவர்: ஔவையார். சிறப்பு: சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரைப் பாடியது. திணை: பாடாண். துறை: வாழ்த்தியல். நாகத் தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினும் தம்மொடு செல்லா; வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து, பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்; வாழச் செய்த நல்வினை அல்லது, ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை; ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர் முத்தீப் புரையக் காண்தக இருந்த கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்; யான் அறி அளவையோ இவ்வே; வானத்து வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் பரந்து இயங்கும் மாமழை உறையினும், உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே!
புறநானூறு > பாடல்: 367
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக